மாணவர்கள் டென்ஷன் இல்லாமல் தேர்வு எழுதுங்கள்..!

மாணவர்கள் டென்ஷன் இல்லாமல் தேர்வு எழுதுங்கள்..!

பிளஸ் டூ தேர்வு 2.3.17 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை புதன்கிழமை மார்ச் 8-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க இருக்கிறது.

பிளஸ் டூ தேர்வு 2.3.17 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை புதன்கிழமை மார்ச் 8-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க இருக்கிறது. தேர்வு நடைபெறும் காலத்தில், மாணவர்கள் மன அழுத்தத்தால்  கடுமையாகப் பாதிக்கப்படுவதை பொதுவாகக் காண முடியும். இதுவரை படிக்காமல் விட்ட பாடங்களைக் குறித்த கவலையும், கேள்வித் தாளில் என்ன கேட்பார்களோ என்ற அச்சமும் அவர்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும்.  ஆனால் இப்படிப்பட்ட மன அழுத்தம் எதுவுமின்றி தேர்வுகளை எளிதாக எழுதி வெற்றி பெற முடியும்.  இதற்கு தேர்வு எழுதுவதற்கு முன்பு கீழ்காணும் எளிய நடைமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே போதும்.
1. தூங்காமல் படிக்கக் கூடாது
தேர்வு காலத்தின்போது இரவு நேரத்தில் படிப்பது என்பது உங்களை உடல்ரீதியில் தளர்ச்சியடையச் செய்யும். தூங்கி எழுந்தாலும் இந்த தளர்ச்சி போகாது. மறுநாள் தேர்வு எழுதும்போது, நன்றாகப் படித்திருந்தாலும், உடல் சோர்வால் நல்லமுறையில் தேர்வு எழுத முடியாமல் போகலாம். தேர்வு நேரத்தில் தூங்கி வழிந்து கொண்டிருப்பீர்கள். கேள்விகளுக்கான விடைகளை மறந்துவிடவும் கூடும். எனவே உடலுக்குத் தேவையான அளவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். தூங்க வேண்டும். உடலைக் களைப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. குழப்பவாதிகளைத் தவிர்க்கவும்
மன அழுத்தம் என்பது பிறரிடம் இருந்தும் நமக்கு வரலாம். எனவே, தேர்வு நேரத்தில் குழப்புபவர்களை நீங்கள் தவிர்த்துவிட வேண்டும். இந்தப் பாடத்தில் இந்த கேள்வியை நிச்சயம் கேட்பார்கள் என்று அவர்கள் சொல்வார்கள். அந்தப் பாடத்தில் அந்தக் கேள்வியை ஒருவேளை நீங்கள் படிக்காமலிருந்தால், தேர்வு நேரத்தில் டென்ஷனாகி தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள்.
நீங்கள் நன்றாகப் படித்திருந்த கேள்விகளுக்கான பதில்களையும் இந்த டென்ஷனால் நல்லமுறையில் எழுத முடியாமல் போகும். எனவே குழப்பவாதிகளிடமிருந்து தள்ளி நில்லுங்கள்.
3. நன்றாகச் சாப்பிடுங்கள்
தேர்வு நேரத்தில் சிலர் அரைகுறையாகச் சாப்பிடுவார்கள். நல்ல சத்தான உணவை உட்கொண்டால்தான், தேர்வை நன்றாக எழுத முடியும். அவசர, அவசரமாக உணவைச் சாப்பிடுவது,  பதற்றத்துடன் சாப்பிடுவது, அல்லது சாப்பிடாமலேயே தேர்வுக்குப் போவது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. சாப்பிடாமல் போனால் தேர்வின்போது, உடல் சோர்ந்து போய், தேர்வு எழுத முடியாமல் போகலாம்.  மயக்கம் வரலாம். எனவே தேவையான அளவுக்குச் சாப்பிட வேண்டும்.
4. 100% தயாராக இருத்தல் அவசியம்
தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் தூங்கச் செல்லும்போது, தேர்வின்போது உங்களுக்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களையும் எடுத்து தயாராக வைத்துவிட வேண்டும். அதாவது, தேர்வில் நீங்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில், ரூலர், எரேசர், கால்குலேட்டர், தண்ணீர் பாட்டில், கைக்கெடிகாரம், ஹால் டிக்கெட், பள்ளி அடையாள அட்டை போன்ற அனைத்தையும் எடுத்து வைத்துவிட வேண்டும். மறுநாள் தேர்வுக்குச் செல்லும்போது அதைப் பற்றிக் கவலைப்படாமல், பதற்றமடையாமல் இருக்கலாம். தேவையான எதையாவது மறந்துவிட்டுச் சென்றால், தேர்வு எழுதும் நேரத்தில் ஏற்படும் டென்ஷனில் அன்றைய தேர்வை நன்றாக எழுத முடியாது.
5. தேர்வில் மட்டும் முழு கவனம்
தேர்வு எழுதும்போது, அதன்மீது மட்டுமே நீங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். தேர்வு அறையில் பிற மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கவனித்துக் கொண்டிருக்கக் கூடாது. தேர்வு அறையில் பிறரது கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்ற திட்டத்துடனும் சில மாணவர்கள் வந்திருப்பார்கள். அவர்களை கவனித்துக் கொண்டிருந்தால், உங்களுடைய கவனம் திசை மாறி உங்களால் சிறப்பாகத் தேர்வை எழுத முடியாமற் போகலாம்.
6. சரியான திட்டம்
கேள்வித் தாளில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளில் சில கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருக்கும், சிலவற்றுக்கு தெரிந்திருக்காது. தெரியாத கேள்விகள் முதலிலும், தெரிந்த கேள்விகள் பின்வரிசையிலும் இருக்கலாம். இதுபோன்ற நேரத்தில் தெரியாத கேள்விகளுக்குப் பதில் எழுதுவதில் உங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கக் கூடாது. தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை முதலில் எழுதிவிட வேண்டும். அப்படிச் செய்வதால், உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com