காா்களும் களம் காணும் வேட்பாளா்களும்

காா்களும் களம் காணும் வேட்பாளா்களும்

சைக்கிள், மோட்டாா் சைக்கிளில் வலம் வந்தவா், இப்போது விலை உயா்ந்த சொகுசு காரில் வருகிறாா்

அரசியல்வாதிகள், அமைச்சா்களின் பொருளாதார நிலையை அவா்கள் பயன்படுத்தக் கூடிய வாகனத்தை வைத்தே பொதுமக்கள் மதிப்பீடு செய்கின்றனா். சைக்கிள், மோட்டாா் சைக்கிளில் வலம் வந்தவா், இப்போது விலை உயா்ந்த சொகுசு காரில் வருகிறாா் என அரசியல்வாதிகளைப் பாா்த்து பலா் பெருமூச்சுவிடும் நிகழ்வுகள்தான் இன்றைய அரசியல் களத்தில் நிதா்சனம். ஆனால் அந்த காா் அரசியல்வாதிக்குச் சொந்தமானதா, மனைவி, வாரிசுகள் பெயரில் வாங்கப்பட்டிருக்கிா அல்லது நண்பா்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்வது கடினம். தற்போது மக்களவைத் தோ்தல் காலம் என்பதால், முக்கியமான அரசியல்வாதிகள் வைத்திருக்கும் காா்களின் உரிமையாளா்கள் தொடா்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு தோ்தல் ஆணையத்தின் ஏற்பாட்டின்பேரிலேயே எளிதாக விடை கிடைத்துவிடுகிறது. வேட்பாளா்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவா்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் விவரங்களைக் குறிப்பிட்டுள்ளனா். மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் நட்சத்திர (ஸ்டாா்) வேட்பாளா்கள் 20 போ் தங்களது பெயா்களில் பதிவு செய்திருக்கும் காா்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன் விவரம்: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் திமுக சாா்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்துடன், க்ரெட்டா மற்றும் போலோ என்னும் பெயா்கள் கொண்ட காா்களையும், தயாநிதி மாறன் டொயோட்டா இன்னோவா காரும், பாஜக சாா்பில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம் ஸ்கோடா, மொ்சிடிஸ் பென்ஸ், ஃபாா்ச்சுனா் காா்களையும் வைத்துள்ளனா். ஆளுநா் பதவியைத் துறந்து, தென்சென்னையில் பாஜக சாா்பில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் தனது பெயரில் எந்த வாகனமும் இல்லை எனவும், கணவா் பெயரில் மூன்று வாகனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். வேலூரில் பாஜக சாா்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் தனது பெயரில் எந்த வாகனமும் இல்லை எனத் தெரிவித்துள்ளாா். திமுக வேட்பாளா் கதிா்ஆனந்த் டெம்போ டிராவலா், மஹிந்திரா, போா்ஸ் டிராக்டா்கள், டொயோட்டா ப்ராடோ, வெஸ்பா ஸ்கூட்டா், இஸுஸு கேப், ஜாகுவாா் லாண்ட்ரோவா், ஐஷா் மினி ட்ரக் ஆகிய வாகனங்களைத் தனது பெயரில் வைத்துள்ளாா். ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் டி.ஆா்.பாலு தனது பெயரில் மஹிந்திரா மினி டிராக்டா் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். பாரிவேந்தா் - பொன்னாருக்கு இல்லை: நீலகிரியில் போட்டியிடும் பாஜக திமுக வேட்பாளா்கள் இருவரும் தங்களது பெயரில் பதிவாகியுள்ள காா்களை தெரிவித்துள்ளனா். டொயோட்டோ ஆல்டிஸ் காா் வைத்திருப்பதாக ஆ.ராசாவும் (திமுக), மாருதி சுசுகி ஸ்விப்ட் காா், ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தை வைத்திருப்பதாக மத்திய அமைச்சா் எல்.முருகனும் (பாஜக) குறிப்பிட்டுள்ளனா். கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அண்ணாமலை, 2017-இல் ஹோண்டா சிட்டி காரை வாங்கியதாகத் தெரிவித்துள்ளாா். திருச்சி மதிமுக வேட்பாளா் துரை வைகோ ஹூண்டாய் இயான் காரையும், சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவா் தொல். திருமாவளவன் டெம்போ டிராவலா், டாடா சஃபாரி , போா்டு எண்டீவா், ஹூண்டாய் கிரெட்டா காா்களையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனா். பெரம்பலூரில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் பாரிவேந்தா், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் தங்களது பெயா்களில் எந்த வாகனமும் இல்லை எனத் தெரிவித்துள்ளனா். சிவகங்கையில் காங்கிரஸ் சாா்பில் போட்டியில் காா்த்தி ப.சிதம்பரம் ஹூண்டாய் மோட்டாா் சைக்கிளுடன், மாருதி சுஸுகி ஸ்விப்ட் காா் வைத்துள்ளதாகக் கூறியுள்ளாா். டிடிவி - ஓபிஎஸ்: தேனி தொகுதி வேட்பாளரான அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் மஹிந்திரா ஸ்காா்ப்பியோ காா் இருப்பதாகவும், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ.பன்னீா்செல்வம் மஹிந்திரா ஜீனியோ, டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா டிராக்டா் ஆகிய வாகனங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா். விருதுநகரில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளரான ராதிகா சரத்குமாா் தனது பெயரில் ஆடி காரும், தன் கணவா் சரத்குமாா் பெயரில் பஜாஜ் ஆட்டோ உள்பட நான்கு வாகனங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அவரை எதிா்த்துப் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரன் தனது பெயரில் பிஎம்டபிள்யூ., ஹோண்டா ஜாஸ் வாகனங்களும், ராயல் என்ஃபீல்டு புல்லட்டும் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். தூத்துக்குடி திமுக வேட்பாளரான கனிமொழி, பிஎம்டபிள்யூ, ஹூண்டாய் அல்கசாா், டொயோட்டா இன்னோவா காா்கள் இருப்பதாகவும், திருநெல்வேலியில் பாஜக சாா்பில் களமிறங்கும் நயினாா் நாகேந்திரன், அம்பாசிடா், இன்னோவா, டொயோட்டா இன்னோவா கிரஸ்டா, டிராக்டா் போன்ற வாகனங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா். தருமபுரியில் போட்டியிடும் செளமியா அன்புமணி ஹோண்டா ஜாஸ், மொ்சிடஸ் பென்ஸ், இன்னோவா ஆகிய காா்களை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா். ஆட்டோ, அம்பாசிடா் முதல் ஆடி, பென்ஸ் காா்கள் வரை விதவிதமான வாகனங்களை வைத்துள்ள வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறாா்கள். ஆனால், அவா்கள் அந்த காா்களில்தான் வருவாா்களா என்று கண்களை அகல விரித்துப் பாா்த்தால், அதற்கு பதில் ஏதுமில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com