18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

நாட்டின் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவையுடன் சேர்த்து ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தலும் 16 மாநிலங்களில் 35 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் 96.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 85 லட்சம் பெண்கள் உள்பட 1.8 கோடி பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர்.

20-29 வயதில் 19.47 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 12 மாநிலங்களில் ஆண் வாக்காளரைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படிவம் 12டி-யின் மூலம் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் நடைமுறை முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தேர்தல் மற்றும் பாதுகாப்புப் பணியில் 1.5 கோடி அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட உள்ளனர்.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

21 மாநிலங்களின் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்.19-ஆம் தேதியும் 13 மாநிலங்களின் 89 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாக ஏப்.26-ஆம் தேதியும் 12 மாநிலங்களின் 94 தொகுதிகளுக்கு 3-ஆம் கட்டமாக மே 7-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

10 மாநிலங்களின் 96 தொகுதிகளுக்கு 4-ஆம் கட்டமாக மே 13-ஆம் தேதியும் 8 மாநிலங்களின் 49 தொகுதிகளுக்கு 5-ஆம் கட்டமாக மே 20-ஆம் தேதியும் 7 மாநிலங்களின் 57 தொகுதிகளுக்கு 6-ஆம் கட்டமாக மே 25-ஆம் தேதியும் 8 மாநிலங்களின் 57 தொகுதிகளுக்கு 7-ஆம் கட்டமாக ஜூன் 1-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. அவ்விரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2-ஆம் தேதி முடிவுக்கு வருவதால், தேர்தல் நடவடிக்கைகள் அன்றே நிறைவடைய வேண்டும் என்பதால் அங்கு முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தொகுப்பு: மா.பிரவின்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com