மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

தேர்தலில் போட்டியிடும் 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்
மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 1,198 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 1,192 வேட்பாளர்களின் தேர்தல் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஆராய்ந்தன.

இந்த ஆய்வின்படி, 1,192 வேட்பாளர்களில் 250 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 167 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. 3 பேர் மீது கொலை வழக்குகளும், 24 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

25 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. ஒரு வேட்பாளர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக 21 வேட்பாளர்கள் மீது வழக்கு உள்ளது.

"சிவப்பு எச்சரிக்கை' தொகுதிகள்: இரண்டாம் கட்ட தேர்தலில் 87 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 52 தொகுதிகள் "சிவப்பு எச்சரிக்கை' தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக பிரமாண பத்திரங்களில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தெரிவித்தால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் "சிவப்பு எச்சரிக்கை' தொகுதிகளாக வரையறுக்கப்படுகின்றன.

இரண்டாம் கட்ட தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 69 வேட்பாளர்களில் 31 பேர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 68 வேட்பாளர்களில் 35 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

இந்தக் கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 5 வேட்பாளர்கள், சமாஜவாதி சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. அவர்கள் அனைவர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. இதுதவிர சிவசேனை வேட்பாளர்கள் இருவர், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர்கள் இருவர், ஐக்கிய ஜனதா தளத்தின் 2 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

33% வேட்பாளர்கள் "கோடீஸ்வரர்கள்': இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 33 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

இவர்களில் 68 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.39.70 கோடி. 69 பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.68 கோடி. நான்கு சமாஜவாதி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.17.34 கோடி. நான்கு சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.81 கோடி. மூன்று சிவசேனை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.54 கோடி. ஐந்து ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.31 கோடி.

"கோடீஸ்வர கம்யூனிஸ்ட்டுகள்': இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.29 கோடி. 5 இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.78.44 லட்சம்.

இதுதவிர, 6 வேட்பாளர்கள் தங்களுக்கு எந்தச் சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com