வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு: வழக்குகள் பெயரளவில் மட்டுமே
வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பெயரளவில் மட்டுமே பதியப்படுவதால், பல் இல்லாத ஆணையமாக, தேர்தல் ஆணையம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, கடும் கெடுபிடிகளை காட்டும் தேர்தல் ஆணையம், கடந்த 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ரூ.4,650 கோடி நகை,பணம்,போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளது. நகை,பணம்,போதைப் பொருள்கள் பிடிபட்ட மாநிலங்களிலும் தமிழகமும் பிரதான இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை வரை ரூ.460.84 கோடி மதிப்புள்ள நகை,பணம்,போதைப் பொருள்கள் பிடிபட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் ரூ.3,449 மதிப்பிலான நகை,பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நாட்டிலேயே அதிகப்படியாக தமிழகத்தில்தான் ரூ.952 கோடி மதிப்புள்ள நகை,பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணமின்றி கொண்டு வரும் பணம்,நகைகளை அவசர கதியில் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. அத்தகைய பணத்தில் 90 சதவீதம் வியாபாரிகள்,விவசாயிகளுக்குச் சொந்தமானது என்பதை அறிந்தபோதும் தேர்தல் ஆணையம் தனது பணியை நிறைவேற்றுகிறது.

ஆனால் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக ஒவ்வொரு தேர்தலின்போதும் பதியப்படும் ஆயிரக்கணக்கான வழக்குகளில், 5 சதவீத வழக்குகளில் கூட தண்டனை கிடைப்பது கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து: உதாரணமாக 2019-ஆம் தேதி மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சரும் திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் தொடர்புடைய இடங்களில் ரூ.10.50 கோடி பறிமுதல் செய்து, தேர்தல் ஆணையம் அந்த தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்தது.

தேர்தல் ஆணையத்தின் இந் நடவடிக்கை அப்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில், காட்பாடி காவல் நிலையத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த வழக்கின் விசாரணை, தற்போது ஆமை வேகத்தில் நடப்பதாக விமர்சிக்கப்படுகிறது. 90 நாள்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய குற்றப்பத்திரிகை 4 ஆண்டுகளுக்கு மேலான இழுத்தடிப்புக்கு பின்னர் கடந்த செப்டம்பர் மாதம்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகார்களால் 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும், 2016-ஆம் ஆண்டு அரவக்குறிச்சி,தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலும் ரத்து செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலைமை, இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது தேர்தல் ஆணையத்துக்கே தெரியாது.

சொற்ப அபராதம்: இது தொடர்பாக ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை உயர் அதிகாரி கூறியது: தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான வழக்குகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்படுகிறது. ஆனால் இச்சட்டங்களில் உள்ள சிறு பிரிவுகள் மூலம் குறைந்தபட்ச தண்டனையை பெற்றுத் தரும் வகையிலேயே வழக்குகள் பதியப்படுகின்றன. பெரும்பாலான வழக்குகளில் ரூ.100-ல் இருந்து ரூ.1,000 அபராதம் கிடைக்கும் வகையிலேயே சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படுகின்றன.

அந்த வழக்குகளின் விசாரணை கூட முறையாக நடத்தப்படுவது கிடையாது. ஒவ்வொரு மாநகர காவல்துறையும், மாவட்ட காவல்துறையும் பிற குற்ற வழக்குகளுடன் சேர்த்தே, தேர்தல் விதிமுறை வழக்குகளையும் சாதாரண வழக்குகளாக நடத்துகின்றன. இதனால் தேர்தல் வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் முடிவில்லாமல் செல்கின்றன. தேர்தல் முடிவடைந்த பின்னர், தேர்தல் ஆணையம் அதிகாரம் இழப்பதினால், இவ் வழக்குகளின் விசாரணையில் அரசு அதிகாரிகளும், கவனம் செலுத்துவது கிடையாது.

சிறப்பு கவனம் தேவை: இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒவ்வொரு வழக்குகளிலும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப்பிரிவுகளை சேர்க்க வேண்டும், குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், வழக்குகளின் நிலை தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

அரசின் அனைத்து மட்டங்களின் தேர்தல் விதிமுறை வழக்குகளை நடத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டும் இனி வரும் தேர்தல்களில் அரசியல் கட்சியினர், விதிமுறை மீறலில் ஈடுபடுவதற்கு அஞ்சுவார்கள் என்றார் அவர்.

தனிப்பிரிவு: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியது: தேர்தல் காலகட்டத்துக்கு பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மத்திய,மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களால் தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகளை நடத்த முடிவதில்லை. தேர்தல் விதிமுறை வழக்குகளை விரைந்து நடத்தி,அதற்கு முடிவு காண கால நிர்ணயம் செய்ய வேண்டும்.

தேர்தல் விதிமுறை வழக்குகளை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தில் தனிப்பிரிவை உருவாக்கி, அதற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதேபோல தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு, தினமும் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.

தேர்தல் விதிமுறை வழக்குகளை பெயரளவுக்கு மட்டும் பதியாமல் அரசியல் கட்சியினருக்கு விடுக்கும் கடைசி எச்சரிக்கையாக இருக்கும் வகையில் கடுமையான சட்டப்பிரிவுகளில் பதிய வேண்டும் என்பது வாக்காளர்களின் கோரிக்கையாகும்.

தேர்தல் வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து நடத்தி,அரசியல் கட்சியினருக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதும் வாக்காளர்களின் வேண்டுகோளாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்பட்சத்தில்தான், தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும்,நேர்மையாகவும் செயல்படுகிறது என்பதை மக்கள் நம்புவார்கள்.

தேர்தல்களும்...பறிமுதலும்...

ஆண்டு தேர்தல்கள் பறிமுதல்

2016 சட்டப்பேரவைத் தேர்தல் ரூ.130.99 கோடி

2019 மக்களவைத் தேர்தல் ரூ.952 கோடி

2021 சட்டப்பேரவைத் தேர்தல் ரூ.446.28 கோடி

2024 மக்களவைத் தேர்தல் ரூ.460.84 கோடி

(ஏப்.15-வரை)

- கே.வாசுதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com