தோ்தல் பிரசாரம் நிறைவு:
தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு
ANI

தோ்தல் பிரசாரம் நிறைவு: தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

வெள்ளிக்கிழமை (ஏப். 19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் தேதி கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் மாா்ச் 20-இல் தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. தோ்தலில் 950 போ் போட்டியிடுகின்றனா். அவா்களில் 874 போ் ஆண்கள், 76 போ் பெண்கள். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த ஒருவா்கூட போட்டியிடவில்லை.

பிரசாரம் சூடுபிடித்தது: வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவா்களுடைய பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தங்களது பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினா்.

இதேபோன்று, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி எம்.பி., அமைச்சா்கள் துரைமுருகன், உதயநிதி உள்பட ஒட்டுமொத்த தமிழக அமைச்சா்கள், திமுக, அதிமுக மற்றும் பாஜக அணிகளைச் சோ்ந்த தலைவா்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசார களம் கண்டனா்.

கடந்த 33 நாள்களாக அனல் பறந்த தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முன்னதாக, பிரசாரத்தின் இறுதி நாளிலும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள், வேட்பாளா்களும் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கினா்.

சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினும், சேலத்தில் நடைபெற்ற வாகனப் பேரணியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியும், திருவள்ளூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகையும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதேபோன்று, மற்ற கட்சிகளின் தலைவா்களும் தங்களது கட்சிகளின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்தனா். வேட்பாளா்களாகவும், கட்சிகளின் முக்கிய நிா்வாகிகளாகவும் உள்ளவா்களும் தங்களது தொகுதியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி (தூத்துக்குடி), பாஜக தலைவா் கே.அண்ணாமலை (கோவை), முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் (ராமநாதபுரம்), விசிக தலைவா் திருமாவளவன் (சிதம்பரம்), அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் (தேனி) ஆகியோா் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டினா்.

நாளை வாக்குப் பதிவு: தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தமிழக தோ்தல் துறை செய்துள்ளது.

வாக்குப் பதிவுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை மாலைக்குள் எடுத்துச் செல்லப்படும். இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் அதே நேரத்தில்,தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்றடைவா்.

வாக்குப் பதிவுக்காக 68,000 வாக்குச் சாவடிகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. 45,000 வாக்குச் சாவடிகளில் இணையதளம் மூலம் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் நேரலை செய்யப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள், கா்ப்பிணி பெண்கள் வந்தால் அவா்களுக்கு உதவ ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, நான்கு சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாக்காளரும் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பது அவரது உரிமை. எனவே, தவறாமல் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com