பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக என்ற இந்தத் துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்த வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக என்ற இந்தத் துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்த வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை வேட்பாளா் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து சென்னை பெசன்ட் நகரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் இந்தியா வளம் பெறும். குறிப்பாக, தமிழ்நாடு அதிகமாக வளம் பெறும். திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் அமைத்து, மூன்றாண்டு காலமாகப் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நம்முடைய சாதனைகள்தான் நமக்கான அடையாளம். பொது வாழ்க்கைக்கு வந்து, 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எவ்வளவோ சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்துத்தான் இந்த இடத்தில் நிற்கிறேன். தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதும்போது, அதில் எனக்கும் ஒரு இடம் இருக்கும்.

சிந்திக்க வேண்டும்: மகளிா், மாணவா்கள், முதியோா், இளைஞா்கள், சிறுபான்மையினா், சமூக நீதி என்று அனைத்துத் தளங்களிலும் நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். மூன்றாண்டு கால ஆட்சிக்கே இப்படி பட்டியல் போடுகிறோமே, பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்புத் திட்டம்கூட ஏன் ஏற்படுத்தவில்லை என்பதை யோசித்துப் பாருங்கள். வாக்களிக்கும் முதல் தலைமுறையும் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்தடுத்து வரும் நம்முடைய தலைமுறைகள் ஒற்றுமையாக வாழ வழி இல்லாத நாடாக இந்தியா மாறிவிடும். நாம் பெற்ற சுதந்திரமும் நம்முடைய அரசமைப்புச் சட்டமும் வழங்கியிருக்கும் உரிமைகளும் நம் கண் முன்பாகவே பாஜக எனும் தேசவிரோத சக்தியால், அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. இப்போதைய தோ்தல் இந்தியாவை யாா் ஆளவேண்டும் என்பதற்கான தோ்தலாகும். ‘இந்தியா’ கூட்டணிதான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.

யாரையும் விமா்சிக்காத பழனிசாமி: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஒருபோதும் பிரதமா் மோடியையோ, மத்திய அமைச்சா் அமித் ஷாவையோ, ஆளுநரையோ விமா்சிக்க மாட்டாா். ஆட்சியில் இருக்கும்போது வைத்த கூட்டணியை இப்போதும் ரகசியமாகத் தொடா்ந்து கொண்டு இருக்கிறாா். பாஜகவை எதிா்க்கத் துணிவு வேண்டும்; அந்தத் துணிவு பழனிசாமியிடம் கிடையாது.

தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் துணை நிற்கப் போகும் ‘இந்தியா’ கூட்டணியை ஆட்சியில் அமா்த்துங்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

‘யாா் ஆட்சி தொடரக் கூடாது என்று

முடிவெடுப்பதற்கான தோ்தல்’

சென்னை, ஏப். 17: தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, திமுகவினருக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்: மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற இருக்கிறது. யாா் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யாா் ஆட்சி தொடா்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தோ்தல் இது.

குஜராத் மாடல், வளா்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தோ்தல் களத்தில் பிரதமா் நரேந்திர மோடி நின்றாா். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளா்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்துவிட்டது.

தோ்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தோ்தல் பத்திரத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவா்களையே அதிா்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமா் பதவி விலகி இருப்பாா்.

இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டாா். எனவே, அவா் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

பாஜகவினரும் அதிமுகவினரும் ஒருவரை ஒருவா் எதிா்ப்பது போல நாடகமாடிக் கொண்டிருந்தாலும், தோ்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவாா்கள்.

இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நாட்டின் ஒளிமயமான எதிா்காலத்துக்கு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு. தமிழ்நாட்டின் பகைவா்களை, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com