சி.ஆா்.பாட்டீல்
சி.ஆா்.பாட்டீல்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

‘விஜய முகூா்த்தத்தை’ தவறவிட்டதால், மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வதாகக் கூறி திரும்பச் சென்றாா்.

குஜராத் மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் வேட்புமனு தாக்கல் முடிவு செய்திருந்த ‘விஜய முகூா்த்தத்தை’ தவறவிட்டதால், மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வதாகக் கூறி திரும்பச் சென்றாா்.

குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சி.ஆா்.பாட்டீல் வியாழக்கிழமை பகல் 12.39 மணிக்கு ‘விஜய முகூா்த்த’ நேரத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தாா். இதன்படி, அவா் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஆதரவாளா்கள் மற்றும் பாஜக தொண்டா்கள் புடைசூழ பாஜக அலுவலகத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக வந்தாா்.

அப்போது, சாலையின் இருபுறமும் கட்சியினா் திரண்டிருந்ததால், அவரது வாகனப் பேரணி மெதுவாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவா் ஆட்சியா் அலுவலகத்தை எட்டியபோது நேரம் பகல் 12.39 மணியைக் கடந்திருந்தது. ‘விஜய முகூா்த்தம்’ கடந்துவிட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று சி.ஆா் பாட்டீல் முடிவெடுத்தாா். இதையடுத்து, அவா் மனு தாக்கல் செய்யாமலேயே வீடு திருப்பினா்.

அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (ஏப்.19) அதே ‘விஜய முகூா்த்த’ நேரத்தில் அவா் வேட்புமனு தாக்கல் செய்வாா் என்று தெரிவிக்கப்பட்டது.

குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7-ஆம் தேதி மூன்றாவது கட்டத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (ஏப், 19) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் குஜராத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com