போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

7 கி.மீ. தொலைவு ஒத்தையடி பாதையில் போலீஸ் பாதுகாப்புடன் எந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.
போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

ராசிபுரம்: நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மலை கிராமமான போதமலைக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் தலைசுமையாக வியாழக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

சுமார் 7 கி.மீ. தொலைவு ஒத்தையடி பாதையில் போலீஸ் பாதுகாப்புடன் எந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

ராசிபுரம் பகுதியில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழூர் ஊராட்சி போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன.

இந்த மலை கிராமத்திற்கு செல்ல இதுவரை சாலை வசதி கிடையாது. சுமார் 7 கி.மீ. தொலைவு ஒற்றையடி பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும். கடந்த ஆண்டு தான் இந்த மலை கிராமத்திற்கு பாதை அமைக்க அரசு ஆணை பிறப்பித்து ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்காக இந்த மலை கிராமத்தில் கீழூர், கெடமலை ஆகிய இரு இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கீழூர் வாக்குச்சாவடியில் 845 வாக்காளர்கள், கெடமலை வாக்குச்சாவடியில் 297 வாக்காளர்கள் என மொத்தம் 1142 வாக்காளர்கள் உள்ளனர்.

மலை கிராமத்திற்கு கீழூர் கெடமலை ஆகிய இரு கிராமங்களில் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனித்தனியாக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு வாக்குபதிவு மையங்களுக்கும் இன்று காலை 7 மணி அளவில் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள், மை, எழுது பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் செல்லப்பட்டது. பின்னர் வடுகம் அடிவாரத்திலிருந்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மண்டல தேர்தல் அலுவலர், உதவி அலுவலர், வருவாய் உதவியாளர்கள் தலைச்சுமையாக போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒற்றையடிப்பாதையில் எடுத்துச் சென்றனர்.

சுமார் 1200 மீட்டர் உயரம் கொண்ட பாதை வசதி இல்லாத இந்த மலைப் பகுதிக்கு ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

ஒரு வாக்குபதிவு மையத்திற்கு மண்டல தேர்தல் அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் என 9 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரு வாக்குப்பதிவு மையத்திற்கும் மொத்தம் 18 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதற்கு முன்பாக வாக்குப்பெட்டி இருந்த காலகட்டத்தில் இந்த மலை கிராமத்திற்கு பெட்டிகளை கழுதை மேல் வைத்து எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com