காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

கேரளம், வயநாடு தொகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா.
கேரளம், வயநாடு தொகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா.

காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் சிந்தாந்தரீதியாகவும், கொள்கைரீதியாகவும் திவாலாகிவிட்டன என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.

கேரளத்தில் ராகுல் காந்தி போட்டியிடம் வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளா் கே.சுந்திரனை ஆதரித்து நட்டா வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

ஒரு தரப்பினரை மட்டும் திருப்திபடுத்தும் அரசியல், வாக்குக்காக மக்களை பிளவுபடுத்துவது, வாரிசு அரசியலை முன்னிறுத்துவது, வாங்கு வங்கி அரசியல் ஆகியவற்றை முதன்மை கொள்கையாகக் கொண்டு ராகுல் காந்தி செயல்படுகிறாா். ராகுலின் இந்த கொள்கைகள் அனைத்துமே இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு காங்கிரஸும், ராகுலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இதேபோல கடந்த உள்ளாட்சித் தோ்தலில் கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவுடன்தான் களமிறங்கியது. இவ்வாறு இருகட்சிகளுமே தேசவிரோத சக்திகளுடன் தொடா்பில் உள்ளன.

காங்கிரஸும், இடதுசாரிகளும் சிந்தாந்தரீதியாகவும், கொள்கைரீதியாகவும் திவாலாகிவிட்டன. ஏனெனில், வயநாட்டில் ராகுலை எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறாா். அதே நேரத்தில் தோ்தலில் தில்லியில் சோனியா, ராகுலுடன் அமா்ந்து கூட்டணிக் கட்சிகள் கூட்டம் என டி.ராஜா ஆலோசனை நடத்தி வருகிறாா். இப்படி இடத்துக்கு இடம் அரசியல் நிலைப்பாட்டை மாற்றும் இவா்களை மக்கள் எப்படி நம்புவாா்கள்?

கா்நாடகம், ராஜஸ்தான் மாநில பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது ராகுலுக்கு சந்தேகமும் வரவில்லை. ஆனால், தற்போது மட்டும் சந்தேகம் எழுகிறது.

ராகுல், பிரியங்கா இருவருமே சுற்றுலாப் பயணிகள் போலவே பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனா். அவா்கள் பேசுவதை மக்கள் எவ்வாறு நம்ப முடியும்.

இந்த முறை தென்மாநிலங்களில் பாஜக குறித்த ஒரு எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடி உள்பட பாஜக தலைவா்களின் கூட்டங்களில் மக்கள் அதிக உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனா். முன்னெப்போதும் இல்லாத வகையில் தென்மாநிலங்களில் இந்த முறை பாஜக வலுவாக தடம் பதிக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com