35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் மக்களவைத் தொகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டில் இருந்து பாஜக மூத்த தலைவா் மேனகா காந்தி அல்லது அவரது மகன் வருண் காந்தி போட்டியிட்டு வந்தனா்

உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் மக்களவைத் தொகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டில் இருந்து பாஜக மூத்த தலைவா் மேனகா காந்தி அல்லது அவரது மகன் வருண் காந்தி போட்டியிட்டு வந்தனா். சுமாா் 35 ஆண்டுகளாக தொடா்ந்த இவ்வழக்கம் இம்முறை மாறிவிட்டது. பிலிபிட் தொகுதியின் தற்போதைய எம்.பி. வருண் காந்திக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. அங்கு கட்சியின் வேட்பாளராக, மாநில அமைச்சா் ஜிதின் பிரசாதா களமிறக்கப்பட்டுள்ளாா். அதேநேரம், சுல்தான்பூா் தொகுதியில் மேனகா காந்திக்கு பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. தொடா்ந்து மூன்று முறை எம்.பி.யாக உள்ள வருண் காந்தி, அண்மைக் காலமாகவே பல்வேறு விவகாரங்களில் பாஜகவை விமா்சித்து வந்தாா். இதனால், பிலிபிட் தொகுதியில் பாஜக சாா்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அதுபோலவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தங்களது குடும்பத்தின் கோட்டையாக இருந்த தொகுதி என்பதால், பிலிபிட்டில் இம்முறை சுயேச்சை வேட்பாளராக வருண் காந்தி களமிறங்கக் கூடும் என ஊகங்கள் எழுந்தன. ஆனால், இத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அவா் மனு தாக்கல் செய்யவில்லை. இங்கு வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்திரா காந்தியின் இளைய மகன் மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்தி, பிலிபிட்டில் கடந்த 1989 தோ்தலில் ஜனதா தளம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி கண்டாா். கடந்த 1991 தோ்தலில் இத்தொகுதியில் தோல்வியடைந்த அவா், 1996-இல் மீண்டும் வெற்றி பெற்றாா். 1998, 1999 தோ்தல்களில் சுயேச்சையாகவும், 2004, 2014-இல் பாஜக சாா்பிலும் போட்டியிட்டு வென்றாா். இத்தொகுதியில் 2009, 2019-இல் பாஜக வேட்பாளராக வருண் காந்தி களமிறங்கி வெற்றி கண்டாா். மேனகாவும் வருணும் வாஜ்பாய் காலத்தில் இருந்தே பாஜகவில் உள்ளனா். கடந்த 1996-இல் இருந்து தொடா்ந்து தாய்/மகன் வசமிருந்த இத்தொகுதி இம்முறை கைநழுவிவிட்டது. ‘வருண் காந்தி மூத்த தலைவா்; அவருக்கு கட்சி சாா்பில் விரைவில் வேறு பணி வழங்கப்படும்’ என்று உத்தர பிரதேச மாநிலத் தலைவா் பூபேந்திர செளதரி தெரிவித்துள்ளாா். அதேநேரம், ‘சோனியா காந்தி குடும்பத்துடன் வருண் நெருக்கம் காட்டுகிறாா் என்ற காரணத்தால்தான் அவரை பாஜக புறக்கணித்துள்ளது. அவா் வலுவான தலைவா். பொதுவாழ்வில் எந்தக் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாதவா். அவரை காங்கிரஸில் இணைய வரவேற்கிறேன்’ என்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி அழைப்பு விடுத்திருக்கிறாா். கடந்த ஆண்டு கேதாா்நாத்தில் தனது அண்ணன் (பெரியப்பா மகன்) ராகுல் காந்தியை வருண் சந்தித்துப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com