இன்று வேட்பாளா் இறுதிப் பட்டியல்: மதிமுக, விசிகவுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்

இன்று வேட்பாளா் இறுதிப் பட்டியல்: மதிமுக, விசிகவுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் சனிக்கிழமை (மாா்ச் 30) வெளியாகிறது. இதுவரை சின்னங்கள் கிடைக்கப் பெறாத, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகின்றன என்பதும் தெரியவரும்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் மீது வியாழக்கிழமை பரிசீலனை நடைபெற்றது. இதில் போதிய ஆவணங்களை இணைக்காத 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 1,085 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இன்று இறுதிப் பட்டியல்:

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற சனிக்கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்படவில்லை. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறும் நடைமுறை முடிவடைந்த பிறகு, மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை விவரம் தெரியவரும். ஒரே வேட்பாளா் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வரை தாக்கல் செய்திருந்தால் அவற்றில் தேவையில்லாத மனுக்கள் திரும்பப் பெறப்படும். இதனால், வேட்புமனுக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சையாகப் போட்டியிடுவோருக்கு வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு சின்னங்கள் ஒதுக்கப்படும். இதற்கான பணிகள் அந்தந்த தோ்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் நடைபெறும். அதன்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com