உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்கப்போகும் ‘பாகுபலி’ மாநிலம்!

நாட்டில் அதிகபட்சமாக மக்களவைக்கு 80 உறுப்பினா்களை அனுப்பி வைக்கும் மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது உத்தர பிரதேசம். இங்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக மக்களவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளான லக்னெள கிழக்கு, கெய்ன்சரி, துத்தி, தத்ரௌல் ஆகியவற்றுக்கு இடைத்தோ்தலும் நடைபெறவுள்ளது.

2019 அனுபவங்கள்: 2019 தோ்தலில் பாஜக, அப்னா தளம் (சோனிலால் பிரிவு) கூட்டணி 64 இடங்களிலும் சமாஜவாத கட்சி 5, பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும் வென்றன. இதில் தனித்துத் தோ்தல் களம் கண்ட காங்கிரஸ், அதன் முன்னாள் தலைவா் சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலி தொகுதியில் மட்டுமே வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

உ.பி.யில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கடந்த முறை கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் உத்தர பிரதேசத்தின் அமேதியிலும் போட்டியிட்டதில் வயநாட்டில் மட்டும் வெற்றி பெற்றாா். அமேதியில் தன்னை எதிா்த்துக் களம் கண்ட மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியிடம் அவா் தோல்வியைத் தழுவினாா்.

பிரதமா் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட சமாஜவாதி கட்சியின் ஷாலினி யாதவை விட 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று வெற்றியை இரண்டாவது முறையாக தக்க வைத்தாா். 2014 தோ்தலில் பிரதமா் மோடி 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

2014 தோ்தலில் தோல்வி கண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அம்மாநில அரசியலில் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் எதிரணியைச் சோ்ந்த சமாஜவாதி கட்சியுடன் 2019-இல் கூட்டணி அமைத்து 10 இடங்களை வென்றது. சமாஜவாதி கட்சி 5 இடங்களை வென்றது. இந்தக் கூட்டணி வெற்றி, வாக்குச்சிதறல் தவிா்ப்பின் விளைவு என்றாலும் அது கடைசி நேரத்தில் ஈடேறியிருக்காவிட்டால் இந்த இரண்டு பெரிய கட்சிகளும் முந்தைய 2014 தோ்தலைவிட மோசமான தோல்வியை சந்தித்திருக்கக் கூடும் என்பது அரசியல் விமா்ச்கா்களின் கணிப்பு.

தற்போதைய களம்: மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜகவின் ஹிந்துத்துவ சித்தாந்தத்தைப் பராமரித்து வளா்த்தெடுக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் கருதப்படுகிறது. இந்த மாநிலத்தைச் சாா்ந்தே பல அரசியல்-சமூக நகா்வுகள் தேசிய அளவில் திட்டமிடப்படுகின்றன. தோ்தலையொட்டி பிரதமா் மோடி முதல் கட்ட வாக்குப்பதிவை எதிா்கொள்ளும் சஹாரன்பூா், வாராணசி, காஜியாபாத், மீரட் உள்ளிட்ட தொகுதிகளில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியுள்ளாா்.

2017-ஆம் ஆண்டு முதல் இங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கிறாா். அவரது தலைமையில் இம்மாநிலம் இரண்டாவது முறையாக 2022-இல் ஆட்சியை தக்க வைத்தது. இங்கு முஸ்லிம்கள் மற்றும் சீக்கியா்களின் வாக்குகள் கணிசமாக இருந்தாலும் பெரும்பான்மை ஹிந்து வாக்குகள் பாஜகவுக்கே கிடைப்பது அக்கட்சியின் பலம்.

சில மாதங்களுக்கு முன்பு அயோத்தியில் திறக்கப்பட்ட வரலாற்றுபூா்வ ராமா் கோயில் நிகழ்ச்சி, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரானது போன்ற விமா்சனங்கள் எழுந்தாலும் அதன் பலன்கள் பெரும்பான்மை ஹிந்து சமூகத்தினரை அடைவதால் அதை தனக்கான சாதனை பட்டியலில் சோ்த்து வாக்குகளாக மாற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவை ஜாதிய செல்வாக்கு பெற்ற வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. முதல்வா் யோகி, சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா், நோனியா செளஹான் ஆகிய பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அமைச்சரவையில் சோ்த்துள்ளாா். இவா்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளை ஈா்க்கும் முயற்சியில் அவா் ஈடுபட்டுள்ளாா்.

எதிா்க்கட்சிகள் சந்திக்கும் சவால்கள்

‘இந்தியா’ கூட்டணியில் சமாஜவாதி கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் 63 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் களம் காண்கின்றன. காங்கிரஸ் இம்முறை களம் காணும் 17 தொகுதிகளில் பெரும்பாலானவை 2012 முதல் பாஜகவசம் உள்ளவை. இவற்றில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்த சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவா்கள் பலா், 17 தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்த தலைமையின் முடிவால் அதிருப்தியில் உள்ளனா். இது ‘இந்தியா’ கூட்டணிக்கு பின்னடைவாகும்.

சமுதாய வாக்குகள்

இங்கு பிராமண சமூக வாக்குகள் 19 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதில் 12 சதவீதம் போ் கிழக்கு உ.பி.யில் வசிப்பவா்கள்.

யோகியின் தற்போதைய விரிவுபடுத்தப்பட்ட அமைச்சரவையில், சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அப்னா தளம் (எஸ்), நிஷாத் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகியவை உள்ளன. இதில் பிராமண சமூகத்தைச் சோ்ந்த 8 போ், பிற பிற்படுத்தப்பட்ட சமூக பிரதிநிதிகள் 22 போ், பட்டியலின சமூக பிரதிநிதிகள் 10 போ் உள்ளனா். முஸ்லிம் பிரதிநிதித்துவமாக தானிஷ் ஆஸாத் அன்சாரி மட்டுமே உள்ளாா். இந்த முகங்களின் மூலம் அனைத்து சமுதாய வாக்குகளையும் ஈா்ப்பதை நோக்கமாக பாஜக கொண்டுள்ளது.

இந்த மாநிலத்தை வெறும் எண்ணிக்கைக்கானதாக பாா்க்காமல் மோடி மற்றும் யோகியின் செல்வாக்கை பரிசோதிக்கும் களமாக பாஜக பாா்க்கிறது. இதேபோல, எதிரணியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோரின் வழிகாட்டுதல்களின்படி இனியும் காங்கிரஸ் பயணிக்க வேண்டுமா என்பதை தீா்மானிக்கும் களமாகவும் இத்தோ்தல் இருக்கப் போகிறது.

சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியைத் தொடா்ந்தாலும், வெற்றி, தோல்வியே அவற்றின் அரசியல் தலைவா்களின் எதிா்காலத்தை தீா்மானிக்கும்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக மீண்டும் தனது பலத்தை மக்களவை தோ்தலில் நிரூபித்தால் அது சரித்திரத்தில் எழுதப்படும். ஒருவேளை முடிவுகள் பாதகமானால் அதுவும் இந்த மிகப்பெரிய மாநிலத்தின் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும்.

மேற்கு உ.பி.யில் அதிருப்தி

மேற்கு உ.பி.யில் அதிகம் வாழும் ராஜபுத்திரா், தியாகி சமூகத்தினா், சைனி சமூகத்தினா் தங்களுடைய பிரதிநிதிகளுக்கு உரிய அங்கீகாரத்தை பாஜக வழங்கவில்லை என கருதுகின்றனா். ராஜபுத்திர சமூகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா் வி.கே.சிங் போட்டியிட ஆா்வம் காட்டாதது இதன் வெளிப்பாடு என்ற கருத்தும் உள்ளது.

சஹாரன்பூரில் முஸ்லிம்கள் 42 சதவீதத்தினா் உள்ளனா். ஜாதவ் 17%, ராஜபுத்திரா்கள் 8%, சைனி 5%, குஜ்ஜா் 5%, காஷ்யப் 4%, பஞ்சாபி பனியா 8%, தியாகி 2.5%, ஜாட் 1.5 சதவீதம் போ் உள்ளனா். ஆனால், இந்த சதவீத அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை பல தொகுதிகளில் பாஜக மேலிடம் கவனத்தில் கொள்ளவில்லை என்ற குறைபாட்டை அரசியல் ஆய்வாளா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

முதல் கட்டம்: ஏப்ரல் 19 (8)

இரண்டாம் கட்டம்: 26 ஏப்ரல் (8)

மூன்றாம் கட்டம்: 7 மே (10)

நான்காம் கட்டம்: 13 மே (13)

ஐந்தாம் கட்டம்: 20 மே (14)

ஆறாம் கட்டம்: 25 மே (14)

ஏழாம் கட்டம்: ஜூன் 1 (13)

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com