தொண்டாமுத்தூர்: எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டி?

கடந்த 2 தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள தொகுதி என்பதால் இந்தத் தொகுதி கூட்டணி கட்சிகளின் கைகளுக்குச் செல்ல வாய்ப்பு குறைவு எனலாம்.
தொண்டாமுத்தூர்: எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டி?

மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தொகுதி. கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் தொண்டாமுத்தூர் தொகுதி மாவட்டத்தின் பெரிய தொகுதியாக இருந்தது. ஆனால் தொகுதி சீரமைப்பில் அந்த பெருமையை இழந்தது. பேரூர் தொகுதி நீக்கப்பட்டு அதிலிருந்த பல பகுதிகள் தொண்டாமுத்தூர் தொகுதியில் இணைக்கப்பட்டன. அதேநேரம், தொண்டாமுத்தூரில் இருந்த பல பகுதிகள் பிரிக்கப்பட்டு கவுண்டம்பாளையம் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.
 
தொகுதிக்குள்பட்ட பகுதிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 48 முதல் 56 வரை, கோயம்புத்தூர் தெற்கு வட்டம்(பகுதி) போளுவாம்பட்டி, தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம், இக்கரை போளுவம்பட்டி கிராமங்கள், வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர்(பேரூராட்சி), தொண்டாமுத்தூர்(பேரூராட்சி), ஆலாந்துறை (பேரூராட்சி), பூலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி), குனியமுத்தூர் (பேரூராட்சி).

தொகுதியின் சமூக, தொழில் நிலவரம்

கவுண்டர் இனத்தவரை அதிகப்படியாகக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் அவர்களுக்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவர்களும், நாயுடு, ஒக்கலிக்க கவுடர்கள் உள்ளிட்டோரும் வசித்து வருகின்றனர். மாநகராட்சிப் பகுதிகள், குனியமுத்தூர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

நொய்யல் ஆறு, தொடங்கும் பகுதியில் இருந்து மாநகரை அடையும் வரை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஓடுவதால் வேளாண் தொழில் செழித்து விளங்குகிறது. தொகுதியின் பெரும்பான்மை மக்கள் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள். சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்படும் பகுதியாக உள்ளது. வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஈஷா யோக மையம், கோவை குற்றாலம், காருண்யா பல்கலைக்கழகம், நொய்யல் ஆறு போன்ற பல்வேறு முக்கிய இடங்கள் உள்ள தொகுதி.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,60,579, பெண்கள் - 1,63,398, இதர பாலினத்தவர் - 76, மொத்தம் -  3,24,053.

கடந்த தேர்தல்கள்

தொண்டாமுத்தூரில் அதிகபட்சமாக அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அடுத்தபடியாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறையும், திமுக, அதிமுக கூட்டணியில் இணைந்து மதிமுக, மார்க்சிஸ்ட், தமாகா போன்ற கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை அதிமுகவினர் தங்களுக்கு எப்போதும் சாதகமான தொகுதி என்று கருதக் கூடிய தொகுதியாக தொண்டாமுத்தூர் உள்ளது.

இதுவரை வெற்றி பெற்றவர்கள்

1951 பழனிசாமி கவுண்டர் (காங்கிரஸ்)
1962 வி.எல்லம்ம நாயுடு (காங்கிரஸ்)
1967 ஆர். மணிவாசகம் (திமுக)
1971 ஆர். மணிவாசகம் (திமுக)
1977 கே. மருதாச்சலம் (அதிமுக)
1980  சின்னராசு (அதிமுக)
1984  செ.அரங்கநாயகம் (அதிமுக)
1989 யு.கே.வெள்ளியங்கிரி (மார்க்சிஸ்ட்)
1991 செ. அரங்கநாயகம் (அதிமுக)
1996 சி.ஆர்.ராமச்சந்திரன் (திமுக)
2001 எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் (தமாகா)
2006 எம். கண்ணப்பன் (மதிமுக)
2009 (இடைத் தேர்தல்) எம்.என்.கந்தசாமி (காங்கிரஸ்)
2011 எஸ்.பி.வேலுமணி (அதிமுக)
2016 எஸ்.பி.வேலுமணி (அதிமுக)

1957 இல் இத்தொகுதி சட்டப்பேரவைத் தொகுதியாக இருக்கவில்லை. 2006 இல் வெற்றி பெற்ற கண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து 2009 ஆகஸ்டில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக பங்கேற்காத இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.என்.கந்தசாமி வெற்றி பெற்று 2011 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

2016 தேர்தல்

எஸ்.பி.வேலுமணி (அதிமுக) - 1,09,519
கோவை செய்யது (மமக) - 45,478
வாக்கு வித்தியாசம் - 64,041

தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

உள்ளாட்சித் துறை அமைச்சரின் தொகுதி என்பதால் தொகுதி முழுவதும் சாலைகள், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுக் குடிநீர் திட்டம், குளங்கள் தூர்வாரப்பட்டது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியகுளம் சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நொய்யல் ஆறு தூர்வாரப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. அதேபோல் சித்திரைச் சாவடி அணையைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தக்காளி அதிகம் விளையும் பகுதி என்பதால் அவற்றை சேகரித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நீண்ட நாள் கோரிக்கையான தொண்டாமுத்தூரில் அரசு கலைக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரூர் படித்துறையை சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

தொகுதியின் முக்கிய பிரச்னைகள்

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் போன்ற விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. அதேபோல் பல ஆண்டுகளாக நீடித்து வரும் புறவழிச்சாலை திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 
 
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

கடந்த 2 தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள தொகுதி என்பதால் இந்தத் தொகுதி கூட்டணி கட்சிகளின் கைகளுக்குச் செல்ல வாய்ப்பு குறைவு எனலாம். மேலும், அதிமுகவில் பலம் பொருந்திய தலைவர்களில் ஒருவராக எஸ்.பி.வேலுமணி இருப்பதாலும், தொகுதியின் பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிருப்பதாலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்பதாலும் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டியிடத் தேர்வு செய்யும் தொகுதி இதுவாகவே இருக்கும்.

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தொண்டாமுத்தூர் கருதப்பட்டாலும் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இந்தத் தொகுதியில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாலும், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் தொகுதியில் அதிகளவில் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு விழக்கூடும் என்பதால் தேர்தல் பணிகளில் அதிமுக அதிக கவனம் கொடுத்து வருகிறது.

இந்தத் தொகுதியை கடந்த 2 தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளுக்கே திமுக வழங்கியிருந்தது. 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கும், கடந்த தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கும் தொண்டாமுத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதேநேரம் பலம் வாய்ந்த எஸ்.பி.வேலுமணியை வீழ்த்த திமுக இந்த முறை கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதால் நேரடியாக திமுக வேட்பாளரே போட்டியிடுவார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com