திருநெல்வேலி: அதிமுக மீண்டும் வெற்றி பெறுமா?

திருநெல்வேலி தொகுதியை அதிமுக போட்டியிட்டால் அக்கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 
திருநெல்வேலி: அதிமுக மீண்டும் வெற்றி பெறுமா?

தமிழகத்தின் தென் கோடியில் முக்கிய நகரமாகக் திகழ்கிறது திருநெல்வேலி. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிந்த பிறகு முதல் முறையாக தேர்தலைச் சந்திக்க உள்ளது திருநெல்வேலி மாவட்டம்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் இருந்த நிலையில், மாவட்ட பிரிவினைக்குப் பின்பு இப்போது 5 தொகுதிகளே உள்ளன. அதில் மாவட்ட தலைநகர் தொகுதியாக கூடுதல் அடையாளம் பெற்றுள்ளது திருநெல்வேலி. இத்தொகுதியில் திருநெல்வேலி, மானூர் வட்டங்கள் உள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சி, சங்கர் நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகள், 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளன.

தொகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 272 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48  ஆயிரத்து 829 பெண் வாக்காளர்கள், 55 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் மொத்தம் 428 வாக்குச்சாவடிகள் இத்தேர்தலில் அமைக்கப்பட உள்ளன. தொகுதியில்

1952-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் எஸ்.என்.சோமயாஜுலு, 
1957 -இல் ராஜாத்தி குஞ்சிதபாதம் (காங்கிரஸ்), 
1962-இல் ராஜாத்தி குஞ்சிதபாதம் (காங்கிரஸ்), 
1967 -இல் ஏ.எல்.சுப்பிரமணியம் (திமுக), 
1971 -இல் பி.பத்மநாபன் (திமுக), 
1977 -இல் ஜி.ஆர்.எட்மண்ட் (அதிமுக), 
1980 -இல் இரா.நெடுஞ்செழியன் (அதிமுக), 
1984 -இல் எஸ்.நாராயணன் (அதிமுக), 
1989 -இல் ஏ.எல்.சுப்பிரமணியம் (திமுக), 
1991 -இல் டி.வேலையா (அதிமுக), 
1996 -இல் ஏ.எல்.சுப்பிரமணியம் (திமுக), 
2001 -இல் நயினார் நாகேந்திரன் (அதிமுக), 
2006 -இல் என்.மாலைராஜா (திமுக), 
2011 -இல் நயினார்நாகேந்திரன் (அதிமுக), 
2016 -இல் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 6 முறையும்,  அதிமுக 6 முறையும் வென்றுள்ளன. ஆலைத் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் கொண்டது திருநெல்வேலி தொகுதி.

கங்கைகொண்டான் சிப்காட், பேட்டை தொழிற்பேட்டை ஆகியவற்றில் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன.

இங்கு பெரும்பான்மையாக தலித் வாக்கு வங்கியே உள்ளது. அடுத்தடுத்த நிலைகளில் பிள்ளைமார், தேவர், யாதவர், நாடார், முஸ்லிம், இதர சமுதாய வாக்காளர்கள் உள்ளனர். கட்சிகள் என எடுத்துக் கொண்டால் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிக்கான வாக்கு வங்கிகளே அதிகம் உள்ளன.

கடந்த தேர்தலில் பாஜக இத்தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகளை பெற்றது. இதுதவிர, கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், தற்போது பாஜகவில் இணைந்திருப்பதால், பாஜகவின் வாக்கு வங்கி சற்று  அதிகரித்துள்ளது.

அமமுகவிற்கும் இத்தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் உற்பத்தி ஆலை, விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் நூற்பாலைகள், ஒன்றிரண்டு இதர தொழிற்சாலைகள் தவிர பெரிய தொழில் வளம் இல்லை. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  ராமையன்பட்டியில் உள்ள திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை திமுக மற்றும் அதிமுகவின் சாதனைகளாக தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

மானூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி வட்டம் என்பதை  இப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. கூட்டுறவு நூற்பாலையை  செயல்படுத்தாதது, மானூர், பள்ளமடை குளத்திற்கான நீர்வரத்து கால்வாய்களை முழுமையாக சீரமைத்து நீர் பெருக்க புதிய  திட்டங்களை வகுக்காதது உள்ளிட்டவை தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள். 

திமுக சார்பில் மீண்டும் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், மாநில நெசவாளர் அணிச் செயலர் சொ.பெருமாள், விவசாய அணியின் கே.ஆர்.ராஜு, சங்கர் நகர் பேரூராட்சித் தலைவர் பேச்சிப்பாண்டியன் உள்ளிட்டோர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர்.

கூட்டணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜகவில் மாநில துணைத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதாலும், ஏற்கெனவே 2 முறை இத் தொகுதியில் வென்றுள்ளதாலும் தொகுதியைப் பெற்றுவிடும் முனைப்பில் உள்ளனர். ஆனால், அவர் இரட்டை இலை சின்னத்திலேயே வெற்றியை ருசித்தார். அப்படியிருக்கையில் புதிய சின்னத்துடன் மக்களைச் சந்திக்கும்போது வெற்றி சவாலானதாக இருக்கும். வாக்காளர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கான தனித்துவத்தைக் கூறி மீண்டும் தொகுதியை தக்கவைக்க அதிமுக முயற்சித்து வருகிறது.

அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா, மாநில அமைப்புச் செயலர் சுதா கே.பரமசிவம், கல்லூர் இ.வேலாயுதம், முன்னாள் எம்.பி.விஜிலா உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். பாஜக போட்டியிட்டால் நயினார் நாகேந்திரனே மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. சட்டப்பேரவை உறுப்பினரின் செயல்பாடுகளில் வேகமில்லாததால் தொகுதியில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. அமமுக வாக்குகள் சிதறினாலும், அதற்கு ஈடாக பாஜக வாக்குகள் கிடைக்கும். திருநெல்வேலி தொகுதியை அதிமுக தக்கவைத்து போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com