கோபி: சாதி வாக்குகள் முக்கியத்துவம் பெறும் தொகுதி

அதிமுக, திமுக இரண்டும் வெற்றிக்கு கடுமையாகப் போராடும் என்றாலும் சாதி வாக்குகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.
கோபி: சாதி வாக்குகள் முக்கியத்துவம் பெறும் தொகுதி

கொடிவேரி அணை, வயல்வெளிகள், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் என இயற்கை வனப்புடன் காணப்படும் கோபிசெட்டிபாளையம் திரைப்படத் துறையினரின் விருப்ப பூமியாக இருந்து வருகிறது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை, கீழ்பவானி பாசன வாய்க்கால்களால் தொகுதியின் பெரும்பாலான விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல், கரும்பு போன்ற பணப் பயிர்கள் விளைவதால் கோபி தொகுதி வளமான தொகுதியாகவே இருந்து வருகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கோபி நகராட்சி, எலத்தூர், கொளப்பலூர், நம்பியூர், பெரிய கொடிவேரி, லக்கம்பட்டி, காசிபாளையம் பேரூராட்சிகள். சத்தியமங்கலம் வட்டத்தில் கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், செல்லப்பம்பாளையம் கிராமங்கள்.

கோபி வட்டத்தில் புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை, கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தாழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம், பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம், நிச்சாம்பாளையம் கிராமங்கள்.

தொழில், சமூக நிலவரம்

கோபி தொகுதியைப் பொருத்தவரை விவசாயம், அதனைச் சார்ந்த தொழில்களே பிரதான தொழில்களாக உள்ளன. நெல், கரும்பு, வாழை, மஞ்சள், சேனைக் கிழங்கு, பூசணி, பரங்கி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தத் தொகுதியில், கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்த நிலையில் நாடார், முதலியார், அருந்ததியர், வேட்டுவகவுண்டர், செட்டியார் சமூகத்தினர், சிறுபான்மையினர் கணிசமான அளவில் உள்ளனர்.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,22,945, பெண்கள் - 1,32,551, மூன்றாம் பாலினத்தவர் - 6, மொத்தம் 2,55,502.

கடந்த தேர்தல்கள்

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தலைச் சந்தித்து வரும் கோபி தொகுதியில் அதிமுக இதுவரை 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன் மட்டுமே 7 முறை வெற்றி பெற்றுள்ளார். இதைத் தவிர காங்கிரஸ் 3 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1952 - நல்லா கவுண்டர் - காங்கிரஸ்.
1957 - பி. ஜி. கருப்பண்ணன் - காங்கிரஸ்
1962 - முத்துவேலப்ப கவுண்டர் - காங்கிரஸ்
1967 - கே. எம். ஆர்.கவுண்டர் - சுதந்திரா கட்சி
1971 - ச.மு.பழனியப்பன் - திமுக
1977 - என்.கே.கே.ராமசாமி - அதிமுக
1980 - கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக
1984 -  கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக
1989 - கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக (ஜெ)
1991 - கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக
1996 - ஜி. பி. வெங்கிடு - திமுக
2001 -  எல்.எஸ்.ரமணீதரன் - அதிமுக
2006 - கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக
2011 -  கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக
2016 -  கே.ஏ.செங்கோட்டையன் - அதிமுக

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.வி.சரவணனை 11,223 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். செங்கோட்டையன் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கோபி தொகுதியைப் பொருத்தவரை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளூரில் இருந்தால் தொகுதி மக்களை நேரடியாக சந்திக்காமல் இருந்ததில்லை என்ற நல்ல பெயர் உள்ளது. கோபி நகராட்சி மட்டுமல்லாது சிறு கிராமங்கள் வரை அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருப்பதுடன் பி.என்.பாளையம் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியையும், நம்பியூரில் அரசு கலைக் கல்லூரியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அத்துடன் தொகுதியில், 10க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நம்பியூர் பகுதியிலும், கோபி - சத்தி சாலையிலும் விபத்துகளைத் தவிர்க்க ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. கோபி சுற்றுவட்டாரத்தில் உள்ள தார்சாலைக புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து மோட்டார் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கீரிப்பள்ளம் ஓடை கழிவுநீரை சுத்திகரித்தே தடப்பள்ளி வாய்க்காலில் கலக்க வேண்டும் என்ற கோபி பகுதி விவசாயிகளின் 10 ஆண்டு கோரிக்கையை ஏற்று இந்த பணிக்கு ரூ.11.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள பிரச்சனைகள்

கோபி நகராட்சியில் குப்பைகளை அழிக்கும் பிரச்னை தொடர்ந்து தீர்வு காண முடியாத சிக்கலாகவே உள்ளது. கழிவுகளை சேகரிக்க நாதிபாளையத்தில் 16 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டாலும் அங்கு குப்பைக் கிடங்கு அமைக்க சுற்றுப்புற மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால் குப்பைக் கிடங்கை மாற்றும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதனால் கோபி நகரில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் தற்போது நகரின் மத்தியில் அமைந்துள்ள, மூடப்பட்டுள்ள பால வித்யா பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

அத்துடன் கோபி தொகுதிக்குள்பட்ட பகுதியில் சேனைக் கிழங்கு, பூசணிக்காய், பரங்கிக்காய் போன்றவை சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. இவை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக கொளப்பலூர் பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  
போட்டியிட வாய்ப்புகள்ள கட்சிகள்

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில் மீண்டும் அதிமுகவே களமிறங்கும் என்றும் வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன்தான் என்றும் அதிமுகவினரின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது. 6 அரசுகளில் அமைச்சர் பதவி வகித்துள்ள கே.ஏ. செங்கோட்டையனுக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படுமானால், ஒரே தொகுதியில் 9 ஆவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் என்ற அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது.

எதிரணியில் கடந்த தேர்தலைப்போல இந்த முறை காங்கிரஸூக்கு இந்தத் தொகுதியை ஒதுக்காமல் தாமே போட்டியிடும் எண்ணத்தில் திமுக இருப்பதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை வீழ்த்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா அல்லது டி.என்.பாளையம் ஒன்றியச் செயலாளர் எம்.சிவபாலனை களமிறக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், திமுக மாநில விவசாய அணி இணைச் செயலர் கள்ளிப்பட்டி மணி, கோ.வெ.மணிமாறன், ஒன்றிய திமுக செயலர் எஸ்.ஏ.முருகன் உள்ளிட்டோரும் கே.ஏ.செங்கோட்டையனை எதிர்க்க ஆர்வத்துடன் உள்ளனர். அதிமுக, திமுக இரண்டும் வெற்றிக்கு கடுமையாகப் போராடும் என்றாலும் ஜாதி வாக்குகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com