நாகர்கோவில்: சமபலத்தில் அதிமுக - திமுக

கட்சிகளின் நிலவரத்தைப் பொருத்தவரை அதிமுகவும், திமுகவும் சம பலத்தில் உள்ளன. அதேநேரத்தில், தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.
நாகர்கோவில்: சமபலத்தில் அதிமுக - திமுக

தமிழகத்தில் படித்தவர்கள் நிறைந்த மாவட்டமாக விளங்குவது கன்னியாகுமரி மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற படித்தவர்கள் நிறைந்த தொகுதியாக நாகர்கோவில் விளங்குகிறது. மேலும் நாகர்கோவில் தற்போது மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நகரப்பகுதி அதிகமுள்ள தொகுதியாக நாகர்கோவில் விளங்குகிறது. 90 சதவீதம் நகரப் பகுதியும், 10 சதவீதம் கிராமப் பகுதியும் உள்ள தொகுதி நாகர்கோவில் தொகுதியாகும்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட 52  வார்டு பகுதிகளை உள்ளடக்கிய நகர்ப்பகுதி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியிலுள்ள அளத்தங்கரை, நீண்டகரை ஏ மற்றும் பி, கணபதிபுரம், ஆசாரிப்பள்ளம் ஆகிய கிராமப் பகுதிகளை உள்ளடக்கியதாக நாகர்கோவில் தொகுதி உள்ளது.

நாகர்கோவில் நகரத்தின் அடையாளமாக விளங்குவது மணிமேடையாகும். இந்த மணிமேடையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை நிறுவப்பட்டுள்ளது.  நாகர்கோவில் நகரில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட எஸ்.எல்.பி.  அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளது.

நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 1957,1962, 1989,1991 ஆகிய 4 முறை காங்கிரஸ் கட்சியும், 1967,1984, 2006,2016 ஆகிய 4 முறை திமுகவும், 1977, 1980, 2011 ஆகிய 3 முறை அதிமுகவும், 1971ல் நடைபெற்ற தேர்தலில் சுதந்திரா கட்சியும், 1996 ல் த.மா.கா.வும், 2001ல் எம்ஜிஆர் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

கட்சிகளின் நிலவரத்தைப் பொருத்தவரை அதிமுகவும், திமுகவும் சம பலத்தில் உள்ளன. அதேநேரத்தில், தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

விழிப்புணர்வு நிறைந்த மக்கள் வசிக்கும் தொகுதியாக இருக்கும் நாகர்கோவில் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 29 ஆயிரத்து 964 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 504 பெண் வாக்காளர்கள், இதர 11 பேர் என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 479  வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் எஸ்.சுரேஷ்ராஜன், அதிமுக சார்பில் நாஞ்சில்முருகேசன், பாஜக சார்பில் எம்.ஆர்.காந்தி, மதிமுக சார்பில் கிறிஸ்டிராணி, பாமக சார்பில் ஜார்ஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். சுரேஷ்ராஜன் 67,369  வாக்குகள் பெற்றார். இது பதிவான வாக்குகளின் அடிப்படையில் 38.87 சதவீதமாகும். பாஜக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி 46,023  வாக்குகள் பெற்றார். இது 26.78 சதவீதமாகும்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட நாஞ்சில் முருகேசன் 45,641 வாக்குகள் பெற்றார் இது 26.44 சதவீதமாகும். நாகர்கோவில் தொகுதியைப் பொருத்தவரை பாஜகவுக்கு தொடர்ந்து செல்வாக்குள்ள தொகுதியாக இருந்து வருகிறது. வரும் தேர்தலிலும் திமுக சார்பில் சுரேஷ்ராஜனுக்குதான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக இந்த தொகுதியை பெற முயற்சித்து வருகிறது. பாஜகவுக்கு ஒதுக்கப்படும்பட்சத்தில் மீண்டும் எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்டப்  பொருளாளர் முத்துராமன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதில் 4 பேருமே பாஜகவின் சார்பில் போட்டியிட மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் குமரி கிழக்கு மாவட்ட செயலரும், ஆவின் தலைவருமான எஸ்.ஏ.அசோகன், முன்னாள் மாவட்ட மகளிர் அணிச் செயலர் வி.பாரதிசாம்சன், திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

சுரேஷ்ராஜனை பொருத்தவரை அடுத்து திமுக ஆட்சி அமைந்தால் அவர் அமைச்சர் ஆவது உறுதி. மேலும், ஏற்கெனவே சுரேஷ்ராஜன் அமைச்சராக இருந்து பணியாற்றியவர் என்பதாலும், கிறிஸ்தவர், சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக திமுகவுக்கு கிடைக்கும் என்பதாலும் வெற்றி பெறுவது எளிது என்ற நிலைதான் உள்ளது. பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் கடுமையான போட்டியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com