Enable Javscript for better performance
TN Assembly election 2021: Rasipuram constituency | ராசிபுரம் (தனி) தொகுதி- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம்(தனி): போட்டியிட பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

    By ஆர். ரமேஷ் கிருஷ்ணன்  |   Published on : 27th February 2021 12:42 PM  |   அ+அ அ-   |    |  

    ராசிபுரம் ரயில் நிலையத்தில் 3-ஆவது நடைமேடைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகள்.

    ராசிபுரம் ரயில் நிலையம்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, விவசாயம், கோழிப்பண்ணை, விசைத்தறித் தொழில் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி அதிகம் என்பதால், இதனைச் சார்ந்த ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி ஆலைகள் அதிகம். விசைத்தறித் துணி உற்பத்தி, பட்டு கைத்தறி நெசவும் உண்டு. இந்தத் தொகுதியில் அதிக அளவில் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளதால், இப்பகுதி கல்வி நகரமாகவும் திகழ்கிறது.

    வாக்காளர்கள் நிலவரம்

    ஆண்கள்:  1,15,161
    பெண்கள்: 1,20,854
    மூன்றாம் பாலினத்தவர்: 15
    மொத்தம்: 2,36,030.  

    தொகுதி நிலவரம்

    ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், அத்தனூர், ஆர்.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூர் ஆகிய 5 பேரூராட்சிகள், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், இதனை ஒட்டிய ஊராட்சிகள் ராசிபுரம் தொகுதியில் அடங்கும்.

    ராசிபுரம் பொதுத் தொகுதி அந்தஸ்தில் இருந்து தனித் தொகுதி பட்டியலுக்கு 2011 முதல் மாற்றம் செய்யப்பட்டது. 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற பி.தனபால், சட்டப்பேரவைத் தலைவரானார். 2016-இல் வெற்றி பெற்ற டாக்டர் வெ.சரோஜா சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் போன்ற பதவிகளைப் பெற்றார். இதனால், இத்தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது.

    இத்தொகுதியில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், நாட்டுக் கவுண்டர்கள், அருந்ததியர்கள் அதிக அளவில் உள்ளனர். முதலியார், வன்னியர், உடையார், தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மையினர் கணிசமாக உள்ளனர்.

    அரசியல் நிலவரம்

    1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்து நான்கு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அந்த நான்கு தொகுதிகளில் ராசிபுரம் தொகுதியும் ஒன்று. அத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.சுந்தரம் திமுக வேட்பாளர் ஆர்.ஆர்.தமயந்தியைவிட கூடுதலாக 454 வாக்குகள் அதிகம் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

    மேலும், அத்தேர்தலில் தற்போதையை நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 23,161 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல கடந்த 1962, 1967, 1971, 1989, 2006 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 5 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1984, 1991, 1996, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, அதிமுக சார்பில் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் போட்டியிட்டனர். அதில் வெ.சரோஜா வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சராக இடம் பெற்று தொடர்ந்து இருந்து வருகிறார். 

    மேலும் 2011 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 1,700 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இம்முறையும் இத்தொகுதியை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கேட்டுப் பெறலாம் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தொகுதி பிரச்னைகள்

    ராசிபுரம் தொகுதியின் பிரச்னை என்று எடுத்துக்கொண்டால், குடிநீர்ப் பிரச்னை, வட்டச்சாலைப் பணிகளில் தாமதம், நூல் விலை உயர்வு போன்றவையே பிரதானம். ராசிபுரம் நகரில் குறுகிய சாலைகள் அதிகம் என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகம். இதனைச் சீரமைக்க சாலை விரிவாக்கம், பேருந்து நிலைய இடமாற்றம் போன்றவை அவசியம் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை.

    தற்போது புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கென தமிழக அரசு ரூ. 932 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதால், குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp