வேதாரண்யம்: நேரடியாகக் களம் காணும் அதிமுக - திமுக

அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காணவே வாய்ப்புள்ளது. அதிமுக அணியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கே இத்தொகுதி மீண்டும் வழங்கப்படும் எனப் பேசப்படுகிறது.
வேதாரண்யம் உப்பளம்
வேதாரண்யம் உப்பளம்

தமிழகத்தில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற பகுதி, வேதங்கள் வழிபட்ட வேதாரண்யேசுவரர் கோயில் அமைந்துள்ள தலம்,  தமிழகத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் மற்றும் வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள பகுதி, தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பகுதி என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி.

வாக்காளர்கள் எண்ணிக்கை: ஆண்கள் - 94,275, பெண்கள் -  98,067. மொத்தம் - 1,92,342.

நில அமைப்பு: வங்கக் கடலோரத்தில் கிழக்கு மற்றும் தெற்கு இரு பகுதிகளிலும் கடற்கரையைக்  கொண்ட மாறுபட்ட நில அமைப்பை கொண்டது இத்தொகுதி. சதுப்பு நிலம், உப்பளம், வன வளம் என இயற்கை வளம் மிகுந்த பகுதி.
 
வேதாரண்யம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 61 ஊராட்சிகள், வேதாரண்யம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகள் மற்றும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.

தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தலைஞாயிறு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

சமூக, தொழில் அமைப்பு

அகமுடையர், வன்னியர் பெரும்பான்மை சமூகத்தினர். இந்த இரு சமூகத்தினரும் தொகுதியின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30 முதல் 34 சதவீதம் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கடுத்த நிலைகளில், பட்டியல் இனத்தவர், முத்தரையர், வெள்ளாளர்கள், இஸ்லாமியர்கள், யாதவர் மற்றும் கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர்.

மானாவாரி நிலப்பரப்பை பெருமளவில் கொண்ட இப்பகுதியில் விவசாயம் பிரதானம். மா, முந்திரி, தென்னை, சவுக்கு என பணப்பயிர்கள் சாகுபடியும், கால்நடை வளர்ப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நிலக்கடலை, புகையிலை, மல்லிகைப்பூ சாகுபடி மற்றும் காய்கனி சாகுபடி, பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. நாகை மாவட்டத்தின் முக்கிய மீன்பிடித் தலங்களில் ஒன்றாக உள்ளது இப்பகுதி.
 
கடந்த காலங்களில் வென்றவர்கள், தோற்றவர்கள்

1962 - என்.எஸ். ராமலிங்கம் (காங்கிரஸ்) : என்.தர்மலிங்கம் (திமுக)
1967 - பி. வெங்கடாசலத்தேவர் (காங்கிரஸ்) : மா.மீனாட்சிசுந்தரம்(திமுக)
1971 - மா.மீனாட்சிசுந்தரம் (திமுக) : பி.சி.வேலாயுதம் (காங்கிரஸ்)
1977 - மா.மீனாட்சிசுந்தரம் (திமுக) : தேவராஜன் (காங்கிரஸ்)
1980 - எம்.எஸ்.மாணிக்கம் (அதிமுக) : மா.மீனாட்சிசுந்தரம் (திமுக)
1984 - மா.மீனாட்சிசுந்தரம் (திமுக) : பி.வி.ராசேந்திரன் (காங்கிரஸ்)
1989 - பி.வி. ராசேந்திரன்(காங்கிரஸ்) :மா.மீனாட்சிசுந்தரம் (திமுக)
1991 - பி.வி.ராசேந்திரன் (காங்கிரஸ்) : மா.மீனாட்சிசுந்தரம்(திமுக)
1996 - எஸ்.கே.வேதரத்தினம்(திமுக) : பி.சி.வி. பாலசுப்பிரமணியன்(காங்கிரஸ்)
2001 - எஸ்.கே.வேதரத்தினம்(திமுக) : ஆர்.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்)
2006 - எஸ்.கே.வேதரத்தினம்(திமுக) : ஓ.எஸ்.மணியன்(அதிமுக)
2011 - என்.வி.காமராஜ் (அதிமுக) : எஸ்.கே.வேதரத்தினம்(சுயேச்சை)
2016- ஓ.எஸ்.மணியன்(அதிமுக) : பி.வி.ராசேந்திரன்(காங்கிரஸ்)

வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயில்
வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயில்

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு

திமுகவின் கோட்டையாக கருதப்பட்டது இத்தொகுதி. பின்னர், அக்கட்சிக்குள் ஏற்பட்ட உள்கட்சி முரண்பாடுகள் கட்சியின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்தது. இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வென்றவரும், கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து விலகி பாஜகவுக்கு சென்றவருமான எஸ்.கே.வேதரெத்தினம் மீண்டும் திமுவுக்கு திரும்பியிருப்பது, இத்தொகுதியில் அக்கட்சிக்கு வலு சேர்க்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

அதிமுகவை பொருத்தவரை அனைத்துப் பகுதியிலும் அமைப்புகளை வலுவாக வைத்துள்ள கட்சியாக விளங்குகிறது. இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் அமைச்சராக இருந்து, பல்வேறு திட்டங்களை இத்தொகுதிக்கு நிறைவேற்றியிருப்பது அதிமுகவுக்கு மிகப்பெரும் பலமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் ஏற்கெனவே 4 முறை வென்ற கட்சியாக உள்ளது. இதற்கு அடுத்தடுத்த நிலைகளில் இடதுசாரிகள், பாமக, அமமுக, பாஜக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் உள்ளன. 

கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம்
கோடியக்கரை வன உயிரினச் சரணாலயம்

திட்டங்கள் நிறைவேறியதும், நிறைவேறாததும்

இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியனுக்கு கிடைத்த அமைச்சர் பதவி, தொகுதிக்குப் பல்வேறு பலன்களை கொடுத்துள்ளது. எதிர்பாராத இடங்களில்கூட நடைபெற்றுள்ள பாலம் பணிகள், சாலைப் பணிகள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்த 110 கே.வி துணை மின் நிலையம், 100 கோபுரங்களுடன் அமைந்திருப்பது மக்களுக்கு ஆறுதல்.

தலைஞாயிறில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், செம்போடையில் அரசு தொழில் பயிற்சி நிறுவனமும் அமைக்கப்பட்டுள்ளன. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுகாட்டுத்துறை, அகஸ்தியம்பள்ளி மற்றும் கைலவனம்பேட்டை ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது.

வேதாரண்யம் கடற்கரைக்கு மேம்படுத்தப்பட்ட தார்சாலை, கடலோரத்தில் பூங்கா, எரிவாயு தகனமேடை, வேதாமிர்த ஏரியைத் தூர்வாரி நான்குபுறமும் தடுப்புச்சுவர் கட்டும் பணி போன்றவை மக்களின் வரவேற்பைப் பெற்ற பணிகள்.

தேரோடும் பிரதான வீதிகளை கான்கிரீட் சாலைகளாக்கும் திட்டம், தலைஞாயிறு தீயணைப்பு நிலையத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் பணி, வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம், வண்டுவாஞ்சேரியில் அரசு தோட்டக்கலை பண்ணை திட்டம் போன்ற பணிகள் இங்கு நடைபெற்றுள்ளன.

ஆயக்காரன்புலம் ஊராட்சியில் அமையும் வேதா ஆயத்த ஆடை பூங்கா, இப்பகுதிக்குக் கிடைத்த மிகப் பெரிய திட்டமாகும். இதன் மூலம், சுமார் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணி, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசு நிதி தவிர அரசு சாரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியோடு நீர்நிலைகளை பராமரித்து மீன் வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடப்பாறு மற்றும் அரிச்சந்திரா நதி ஆறுகளில் நீர்த் தேக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆற்றுக் கரைகளில் குடியிருந்த சுமார் 400 குடும்பங்களுக்கு கான்கிரிட் வீடுகள் அமைக்கப்பட்டு, மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, 12 ஆயிரம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்க  ஆயத்தமான நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக, பட்டா வழங்கல் பணி தடைப்பட்டுள்ளது.  இதனால், அரசின் தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகளும் தாமாகி வருகின்றன.

கோடியக்கரை வன உயிரின சரணாலயம் மேம்பாட்டுப் பணிகளும்,  கஜாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணிகளும் தாமதமாகி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு 5 ஆண்டு திட்டத்திலும் இத்தொகுதிக்குக் கிடைத்த திட்டப் பணிகளை ஒப்பிடும்போது, கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதிக்குக் கிடைத்த வளர்ச்சி, அனைவரையும் வியப்படையச் செய்வதாக உள்ளது.

எதிர்பார்ப்புகள்

கோடியக்கரை படகுதுறையில் சிறு படகுதுறையும், முள்ளியாறு போன்ற முக்கிய வடிகால் ஆறுகளை தூர்வாரி கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும், மின் இறைவை திட்டத்தை மேம்படுத்த வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் முக்கியமானவையாக உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இத்தொகுதியில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காணவே வாய்ப்புள்ளது. அதிமுக அணியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கே இத்தொகுதி மீண்டும் வழங்கப்படும் எனப் பேசப்படுகிறது. திமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.கே. வேதரத்தினம், என்.வி. காமராஜ் உள்பட 8 பேர் வாய்ப்புக் கோரும் நபர்களாக குறிப்பிடப்படுகின்றனர். தவிர்க்க இயலாத நிலையில், திமுக அணியில் அதன் கூட்டணி கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 
அமைச்சர் ஓ.எஸ். மணியனின் சொந்த தொகுதி என்பதால், வேதாரண்யம் தொகுதியின் தேர்தல் களம் பிற தொகுதிகளைவிட விறுவிறுப்பாகவே இருக்கும். இருப்பினும், தற்போதைய நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்டதைப் போன்ற மும்முனைப் போட்டிக்கு இம்முறை வாய்ப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com