ஒரு வாக்கின் சக்தி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள் உண்டு

அதுபோல, ஒரே ஒரு வாக்கின் சக்தியை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியர்களிடம்தான் கேட்க வேண்டும்.
ஒரு வாக்கின் சக்தி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள் உண்டு
ஒரு வாக்கின் சக்தி: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள் உண்டு

ஒரு நொடியின் மகத்துவம் தெரிய வேண்டுமா? ஒலிம்பிக் போட்டியில் முதல் பரிசை இழந்தவரிடம் கேட்டுப் பாருங்கள் என்பார்கள். அதுபோல, ஒரே ஒரு வாக்கின் சக்தியை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியர்களிடம்தான் கேட்க வேண்டும்.

நான் ஒருவர் வாக்களிக்காவிட்டால் என்ன? என்னுடைய ஒரு வாக்கினால் யாருக்கு லாபம்? என்று கேட்பவர்களுக்காகவே இந்தப் பதிவு.

அதாவது நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் பல தேர்தல்களில். இந்தியாவிலும் கூட.

2004-ஆம் ஆண்டு கர்நாடக பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது சாந்தேமரஹள்ளி (தனி) தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஆர். கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் ஆர். துருவ்நாராயணனிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு 40,751 வாக்குகள் கிடைத்த நிலையில், வெற்றி பெற்ற துருவ்நாராயணன் பெற்ற வாக்கு 40,752 வாக்குகள்.

அடுத்து, 2008-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் நடந்துள்ளது. நதட்வாரா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சி.பி. ஜோஷி, பாஜக வேட்பாளராக கல்யாண் சிங் சௌஹான் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான போது, 62,216 வாக்குகள் பெற்ற சௌஹான் வெற்றி பெற்றதாகவும், அவரை விட ஒரே ஒரு வாக்கு குறைவாகப் பெற்ற ஜோஷி 62,215 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது ஜோஷிக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அவர் அப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், முதல்வர் வேட்பாளராகவும் அறியப்பட்டவர். இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற தலைமையேற்றுப் பணியாற்றினார். ஆனால், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

இது தொடர்பான அவர் நீதிமன்றம் வரைச் சென்று போராடினார். ஆனால் உச்ச நீதிமன்றம் இவரது தோல்வியை உறுதி செய்தது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சிபி ஜோஷி தோல்வியடைந்தபோது, அவரது தாய், சகோதரி, கார் ஓட்டுநர் மூவரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யத் தவறிவிட்டனர். அதுபோலவே, கர்நாடக விவகாரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கார் ஓட்டுநரும், வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை கிடைக்காததால், தனது வாக்கினை செலுத்தத் தவறிவிட்டார். எனவே, ஒவ்வொரு தனி மனிதரின் ஓட்டும் மிகவும் அவசியம்.

அவ்வளவு ஏன், 1999-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சிக்கு, அதிமுக அளித்து வந்த ஆதரவு திரும்பப் பெறப்பட்டது. நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோல்வியடைந்தது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்து, ஒரே ஒரு வாக்கினால், ஆளும் கட்சி எதிர்க்கட்சியானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com