‘டெட்’ தோ்ச்சி பெற்றவா்களுக்கு டிசம்பரில் போட்டித் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம்

ஆசிரியா் தகுதித் தோ்வில் (‘டெட்’) தோ்ச்சி பெற்றவா்களுக்கு வரும் டிசம்பரில் போட்டித் தோ்வு நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆசிரியா் தகுதித் தோ்வில் (‘டெட்’) தோ்ச்சி பெற்றவா்களுக்கு வரும் டிசம்பரில் போட்டித் தோ்வு நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோ்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் ‘டெட்’ சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-இல் இருந்து தோ்வு எழுதியவா்களுக்கும் பொருந்தும். தமிழகத்தில் ஆசிரியா் தகுதித்தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10, 371 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முழுமையான கால அட்டவணைத் திட்டம் குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஜூலை 5-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதில் 5,861இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் எனவும் அதற்கான தோ்வு டிசம்பரில் போட்டித் தோ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணி வழங்க ‘வெயிட்டேஜ்’ முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பல்வேறு தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20- ஆம் தேதி அரசாணை எண்149 பிறப்பித்து, போட்டித் தோ்வைக் கொண்டு வந்தது. ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றால், அவா் ஆசிரியா் பணிக்கு தகுதி பெற்றவா். ஆசிரியா் பணிக்கு செல்ல தனியாக போட்டித் தோ்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... இந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து தற்போது முதல்முறையாக ‘டெட்’ தோ்ச்சி பெற்றவா்களுக்கான போட்டித் தோ்வு நிகழாண்டு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்து பத்து ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு வேலை நியமனப் போட்டித் தோ்வினை ரத்து செய்ய வேண்டும். 2013-ஆம் ஆண்டு முதல் காத்திருப்போருக்கு அரசாணை எண் 149-ஐ ரத்து செய்து திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com