டாம்பீக செலவு செய்வது மகா குற்றம்

கோடிக்கணக்கான பாமர மக்கள்
டாம்பீக செலவு செய்வது மகா குற்றம்

கோடிக்கணக்கான பாமர மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் போது, மாணவர்கள் டாம்பீகச் செலவுகள் செய்வது பெரிய குற்றமாகும் என்று சென்னையில் நேற்று நடந்த மாணவர்கள் கூட்டத்தில் மகாத்மா காந்தி கூறினார்.
மாணவர்கள் அனைவரும் கதரணிய வேண்டுமென்றும் அவர் வற்புறுத்தினார். கதர் இந்திய சுதந்திரத்தின் சின்னமென்று பண்டித நேரு கூறியதை அவர் நினைவுபடுத்தினார். முகமாவு, உதட்டுக்கு வர்ணம் முதலிய ஒப்பனைப் பொருள்களை உபயோகிக்கும் வழக்கம் மாணவர்களிடையும் குறிப்பாக மாணவிகளிடையும் பரவியுள்ளதை கண்டித்து காந்திஜி கூறியதாவது:-
நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதைப் போன்ற போக பொருள்களில் பணத்தை விரயமாக்குவது மிகவும் கேவலமானது. கல் சிலைக்குத் தான் மை பூச வேண்டும். மனித உயிர்களுக்குத் தான் இயற்கை அழகு இருக்குமே.
புகை பிடிக்கும் வழக்கத்தை கண்டித்து காந்திஜி கூறியதாவது:-
நான் மாணவனாக இருந்த போது திருட்டுத்தனமாக ஓரிரண்டு தடவை புகை பிடித்தேன். ஆனால் வெகு விரைவில் அத் தவறுக்காக வருந்தி அதை நான் திருத்திக் கொண்டேன். அது மிகவும் கெட்ட வழக்கம். மாணவர்கள் அந்த வழக்கத்தை அறவே அகற்ற வேண்டும். உங்களிடம் சகிப்புத் தன்மை வேண்டும். மற்றவர் கருத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சத்தியம், அஹிம்சை மூலமாகத்தான் சுயராஜ்யம் பெற முடியுமென்று நான் சென்ற 25 வருஷகாலமாகப் போதித்து வந்துள்ள போதிலும், ஆயுதம் உபயோகித்தால் தான் இந்தியா சுதந்திரம் அடைய முடியுமென்று யாராவது கூறினால், அவர் கூறுவதையும் நான் பொறுமையுடன் கேட்பேன். சத்தியமும், அஹிம்சையும் பரமாணுச் சக்திகுண்டைவிட சிறந்த ஆயுதங்கள். பரமாணுச் சக்திகுண்டு என் உடம்பைத் தான் கொல்ல முடியும். ஆனால் என் ஆத்மாவை அழிக்க முடியாது.


தினமணி (31-1-1946)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com