மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க குழு: சுகாதாரத் துறைக்கு  நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில்  கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க குழு: சுகாதாரத் துறைக்கு  நீதிமன்றம் உத்தரவு


அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில்  கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவரான சிலம்பன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோரை கவனிக்க வேண்டியிருப்பதால் பணியிலிருந்து ராஜிநாமா செய்வதாக கூறி மருத்துவமனை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அந்தக்
கடிதத்துக்கு மருத்துவமனைத் தலைவர் முடிவு எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மருத்துவர் சிலம்பன் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணிக்கு வரவில்லை. 
இதனையடுத்து, அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி, மருத்துவர் சிலம்பனுக்கு, மருத்துவமனைத் தலைவர்  அறிவிப்புக்கடிதம் அனுப்பினார். 
இந் நிலையில், தனது ராஜிநாமா கடிதத்தை ஏற்று பணியிலிருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி, மருத்துவர் சிலம்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
 இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்களின் வரிப்பணத்தில், அரசு கல்லூரிகளில் படித்து சிறப்பான அனுபவத்தைப் பெற்ற அரசு மருத்துவர்கள், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். 
வணிகமயமாகிவிட்ட மருத்துவ துறையைச் சேர்ந்த பல மருத்துவர்கள் அரசு செலவில் படிப்பது மற்றும் நிபுணத்துவத்தைப் பெற்றுவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதும், வெளிநாடுகளுக்குச் செல்வதும் அதிகரித்து வருவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். 
மேலும், அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அனுமதியின்றி விடுமுறையில் செல்கின்றனர். எனவே, அரசு மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட  செயல்பாடுகளைக் கண்காணிக்க, கண்காணிப்புக்குழுவை சுகாதாரத்துறை  அமைக்க  வேண்டும். மேலும், அரசு செலவில் தரமான கல்வி, நிபுணத்துவத்தைப் பெற்றுவிட்டு, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் 
மருத்துவர்களிடம் இருந்து, இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.  
இந்த விவகாரத்தில் , மருத்துவர் சிலம்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைச் செயலருக்கு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com