தாங்கவே முடியாத அளவுக்கு மூட்டு வலியா? இதோ எளிய நிவாரணம்!

எனக்கு வயது 56 ஆகிறது. இரண்டு கால் மூட்டுகளிலும் வீக்கம் பெரிதாகவும், எரிச்சலாகவும், தொட்டால் மூட்டைத் தொட முடியாத அளவிற்கு சூடுள்ளதாகவும் இருக்கிறது.
தாங்கவே முடியாத அளவுக்கு மூட்டு வலியா? இதோ எளிய நிவாரணம்!

எனக்கு வயது 56 ஆகிறது. இரண்டு கால் மூட்டுகளிலும் வீக்கம் பெரிதாகவும், எரிச்சலாகவும், தொட்டால் மூட்டைத் தொட முடியாத அளவிற்கு சூடுள்ளதாகவும் இருக்கிறது. அடிக்கடி காய்ச்சலும் ஏற்படுகிறது. மூட்டுகளை அசைப்பதற்கே கடினமாக உள்ளது. தற்சமயம் விரல் கணுக்கள், கழுத்து போன்ற பகுதிகளில் இதே போன்ற உபாதைகள் தொடங்கியுள்ளன. இதை எப்படிக் குணப்படுத்துவது?
 -முரளிதரன், கோவை.

நீங்கள் குறிப்பிடும் இந்த உபாதைக்கு 'ரத்தவாதம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. இதில் வாதம், ரத்தம் (பித்தம்) இவை அழற்சியுறுவது தான் முதல் காரணம். காரம், புளி, உப்புச் சுவையை அதிகம் பயன்படுத்துவதாலும், மதுபானம், புகை பிடித்தல், அடிக்கடி டீ, காபி பருகுதல், சிறு விஷயங்களுக்குக் கூட அதிகம் கோபப்படுதல், புலால் உணவுகளாகிய மீன், கருவாடு, சிக்கன், முட்டை அதிகம் சாப்பிடுதல், குடும்பச் சூழ்நிலை பற்றிய அதிக கவலை, எந்நேரமும் சிந்தனைவயப்படுதல் ஆகியவற்றால் பித்தம் சார்ந்த குணங்கள் உடலில் தூண்டப்பட்டு, ரத்தத்துடன் கலப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இவை. சூடும், ஊடுருவும் தன்மையும், நீர்த்த தன்மையும் கொண்ட குணங்கள், பித்தத்திற்கும், ரத்தத்திற்கும் பொதுவானவை. இவை அனைத்தும் மேற்குறிப்பிட்ட காரணங்களால் வளர்ச்சியடைந்து, ரத்தத்தில் காந்தலை ஏற்படுத்துகிறது அதன் பிரதிபலிப்பையே மூட்டுகளில் எரிச்சலாகவும் தொட்டால் சூடுள்ளதாகவும் உணர்த்துகிறது.

ரத்தவாத உபாதையில் எண்ணெய், நெய், வெண்ணெய், பால் போன்ற நெய்ப்புள்ள குணமுள்ளதும் குளுமையுமான மருந்துகளையே பயன்படுத்த வேண்டிய நிர்பந்தமிருப்பதால், நீங்கள் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய பிண்டதைலத்தை வீக்கமுள்ள மூட்டுகளில் தாராளமாக மேலுக்குப் பயன்படுத்தவும். எண்ணெய்யை கையினால் வீக்கத்தின் மீது வைத்துத் தேய்க்க வேண்டாம். அது வலியை அதிகரிக்கக் கூடும். அதற்கு மாற்றாக, தைலத்தை மூட்டுகளின் மீது தாரையாக ஊற்றவும். சுமார் கால் மணி நேரம் ஊற்றினால் சூடும் எரிச்சலும் நன்றாகக் குறையும். வலி பொறுக்கும் அளவிற்குக் குறையும். அதன் பிறகு, பஞ்சை பிண்ட தைலத்தில் சொட்ட சொட்ட நனைத்து வீக்கமுள்ள இடத்தின் மேல் இட்டு வைக்கவும். தோல் வழியாக பஞ்சு சூடாக வாய்ப்பிருப்பதால், அதை சிறிது நேரத்திலேயே எடுத்துவிட்டு, வேறொரு பஞ்சை தைலத்தில் முக்கி எடுத்து வீக்கத்தின் மீது போடவும். சுமார் 2 வாரம் இதைச்செய்யலாம்.

ஜடாமயாதி எனும் பெயரில் விற்கக் கூடிய சூரண மருந்தை, அரிசிவடித்த கஞ்சித் தண்ணீரில் குழைத்து வீக்கத்தின் மீது பற்றிடப் பயன்படுத்துவதன் மூலம் வீக்கம், வலி, எரிச்சல், சூடு ஆகியவற்றைத் தணிக்கலாம். கடுமையான நாட்பட்ட உபாதையாக இருப்பவர்களுக்கு, அட்டைப் பூச்சியை கடிக்கச் செய்து கெட்டுப் போன ரத்தத்தை சிறிய அளவில் எடுத்துவிடுவதன் மூலமாகவும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்நோயில் உள்ளுக்குக் கொடுக்கக் கூடிய சிறந்த மருந்தாக சீந்தில்கொடியைக் குறிப்பிடலாம். சீந்தில் கொடியை சிறிது முறுக்கினால் அதன் மேல் படர்ந்துள்ள மெல்லிய தோல் விடுபட்டுவிடும். அதை நீக்கிவிட்டு, கொடியை சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர்விட்டு இடித்துப் பிழிந்தெடுத்த சாறு, சீனாக் கற்கண்டுடன் காலை, மாலை சுமார் 50 மி.லி. சாப்பிட்டு வர, காய்ச்சல் குறையும், ரத்தவாதமும் குணமாகும். திராக்ஷôகி கஷாயத்தை உள்ளுக்குச் சாப்பிட, மலச்சிக்கல் வராமல் பாதுகாப்பதுடன் நீங்கள் குறிப்பிடும் உபாதைக்கும் நல்லது. குடூசிஸத்வம் என்ற பெயரில் விற்கப்படும் மருந்தை வேளைக்கு ஒன்றிரண்டு சிட்டிகை அளவாகத் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு அதன் மேல் பால் பருகிவருவதும் நல்லதே.

கடும் பத்திய நிலைகளை அனுசரிக்க வேண்டிய அவசியமுமிருக்கிறது. உணவில் பித்த சீற்றத்திற்கான முன் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்ப்பதுடன் இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் சேர்ப்பதுடன், ரத்தத்திலுள்ள காந்தலை நீக்கக் கூடிய குளிர்ச்சியானதும் விஷவஸ்துக்களை அகற்றக் கூடியதுமான நன்னாரி வேர்ப்பட்டையை கடுக்காய்த் தோலுடன் இடித்து மண்பானைத் தண்ணீரில் ஊற வைத்துக் குடிப்பதும் அவசியமாகும். மனதில் கவலையை ஏற்படுத்தும் செயலும், கோபமான சொற்களைப் பிறர் மீது சொல்லாமலிருப்பதும் தேவை. கோகிலாக்ஷம், பிருகத்யாதி போன்ற கஷாய மருந்துகள், தசமூலஹரீதகீ எனும் லேகியம் போன்றவை உள் மருந்தாகச் சாப்பிட உகந்தவை.

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com