அரிப்புக்குக் காரணம்... உட்புறக் கழிவுகள்!

வயோதிகத்தில் உப்புசத்து உடலில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. சிறுநீரகங்களின் வழியாக வெளியேற வேண்டிய தேவையற்ற உப்பு மற்றும் தாதுப்பொருட்கள் தேக்கமடைந்தால் அது உடலில் எந்த பகுதி தளர்ந்திருக்கிறதோ
அரிப்புக்குக் காரணம்... உட்புறக் கழிவுகள்!

என் வயது 71. ஓய்வூதியர். இரண்டு கை மணிக்கட்டு, புறங்கைப் பகுதிகளில் அரிப்பு அதிகமாக இருக்கிறது. பிடறியிலும் அதே அறிகுறி உள்ளது. இதற்கான சிகிச்சைமுறையைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
 த.நாகராஜன், சிவகாசி.

வயோதிகத்தில் உப்புசத்து உடலில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. சிறுநீரகங்களின் வழியாக வெளியேற வேண்டிய தேவையற்ற உப்பு மற்றும் தாதுப்பொருட்கள் தேக்கமடைந்தால் அது உடலில் எந்த பகுதி தளர்ந்திருக்கிறதோ, அந்தப் பகுதியில் குடிகொண்டு அரிப்பை ஏற்படுத்தும். அதனால் வெளிப்புறப்பூச்சுகள் மட்டும் இதில் பயன்பெறுவதில்லை. திரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சமச்சீரான நிலையில் நோய்கள் ஏதும் தோன்றுவதில்லை என்றும், அவற்றில் ஏற்படும் ஏற்றமும் இறக்கமுமே நோயாக மாறுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அந்தவகையில் வாயு அதிகரிக்கக் கூடிய வயதில் தங்களுக்கு கபத்தினுடைய சேர்க்கையும் சேருமானால் அதுவே தோலில் அரிப்பை ஏற்படுத்தக் கூடும். இவ்விரு தோஷங்களையும் சமநிலைப்படுத்தக் கூடிய ஏலாதி என்ற பெயரிலுள்ள தைல மருந்தை காலை, மாலை இருவேளை வெளிப்புறப் பூச்சாகப் பயன்படுத்தி சுமார் அரை  மணிநேரம் ஊற வைத்து ஏலாதி சூரணம் என்ற மருந்துடன் கடலை மாவு கலந்து தயிர் மேலில் நிற்கக் கூடிய தண்ணீருடன் குழைத்து அந்த எண்ணெய்ப் பசையை அகற்றுவதற்காக நீங்கள் பயன்படுத்தலாம்.

உட்புற உறுப்புகளின் செயல்திறன்பாடானது குறையும் பட்சத்தில் இந்த உபாதை தோல்புறத்தில் பிரதிபலிக்கலாம். அதிலும் முக்கியமாக குடலின் உட்புற சவ்வுகளில் தேங்கும் அழுக்கினால் தோல் அரிப்பு ஏற்படும் என்றும் ஒரு வினோதமான குறிப்பை ஆயுர்வேதம் வெளிப்படுத்துகிறது. அதனால் குடல் சுத்தம் தாதுக்களில் படிந்துள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகள், மலம், சிறுநீர், வியர்வை ஆகிய பகுதிகளைத் தாங்கக் கூடிய பை மற்றும் குழாய்களில் படியும் படிவங்களையும் நீக்கினால் வெளிப்புறத்தில் ஏற்பட்டுள்ள தோல் அரிப்பானது மறைந்துவிடும். குடல் சுத்தத்தை நேரடியாகச் செய்யக்கூடாது என்ற நியமம் இருப்பதால் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய திக்தம் அல்லது மஹாதிக்தகம் ஆகியவற்றில் ஒன்றை சுமார் பதினைந்து மில்லி லிட்டர் காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட உட்புறபடிவங்களை நெகிழ வைத்து அவற்றைக் குடலுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு இந்த நெய் மருந்துகள் மாற்றித் தரும். நெருப்பினுடைய சம்பந்தமில்லாமல் வியர்வையை வரவழைக்கக் கூடிய கம்பளியைப் போர்த்திக் கொள்ளுதல், வேகமான நடைப் பயிற்சி, சிலம்பாட்டம் போன்றவற்றின் மூலமாக நன்றாக வியர்வையை உடலில் ஏற்படுத்தி அதன்மூலம் உட்புறக் கழிவுகளை திரவமாக்கி குடல் உட்புறப் பகுதிகளில் விரைவாக எடுத்துச் செல்லும் வழியை இந்த வியர்வையின் மூலமாகப் பெறலாம். குடல் பகுதியில் குவிந்துள்ள அழுக்குகளை ஆசனவாய் வழியாக நீர்பேதியாக வெளியேற்றும் த்ரிவிருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம், மிஸ்ரகஸ்நேஹம், மாணிபத்ரம் குடம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு அதன் மூலம் பெறும் குடல் சுத்தமானது தோலில் ஏற்பட்டுள்ள அரிப்பை நீக்குவதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும். அரிப்பு குறைந்தாலும், வேப்பெண்ணெய்யைச் சிறிதுகாலம் இளஞ்சூடாக அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பூசி அரை முக்கால் மணிநேரம் ஊறிய பிறகு குளிக்கலாம்.

 உணவில் புளித்த தயிர், கத்தரிக்காய், நல்லெண்ணெய், கடுகு, உளுந்து சேர்க்கக் கூடிய இட்லி, தோசை, வடை, புலால் உணவு, பகல் தூக்கம், கனமான பொருட்களாகிய மைதா, பன்-பட்டர்-ஜாம், பிஸ்கட்டுகள், இனிப்பு வகைகள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை. குடிக்கக்கூடிய தண்ணீரையும் ஒரு மூலிகைத் தண்ணீராக மாற்றினால் சிறப்பாக அமையும். அந்தவகையில் கருங்காலிக் கட்டை, சரக்கொன்றைப்பட்டை, நன்னாரிவேர்ப்பட்டை ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி ஒருநாளில் பலதடவை சிறுகச் சிறுகப் பருகுவதால் குடல் உட்புற சுத்தம் பெறுவதுடன் இரத்தமும் சுத்தமாகும். அங்குமிங்கும் ஒட்டியிருக்கக் கூடிய கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம் போன்ற குணங்களுக்கு நேரெதிராகச் செயல்பட்டு அவற்றை நீர்க்கச் செய்து சிறுநீர் மலம் மற்றும் வியர்வையின் மூலமாக இந்த தண்ணீரே வெளியேற்றிவிடும் சிறப்பு வாய்ந்தது. நால்பாமரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேப்பம்பட்டை, புங்கம்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, வில்வமரப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தண்ணீரை, குளிப்பதற்காக பயன்படுத்தினால் அரிப்பு குறைவது திண்ணம்.
 (தொடரும்)

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com