விராட் கோலியின் எனர்ஜி ரகசியம்! 

வேகப்புயல், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் என்று மீடியாக்கள் எப்போதும் இவரைப் புகழ்ந்து தள்ளுகின்றன. நம்ப முடியாத உத்திகளுடன், அபாரமாக தன் அணியை முன்னெடுத்துச் செல்பவர் என்று சக விளையாட்டு
விராட் கோலியின் எனர்ஜி ரகசியம்! 

வேகப்புயல், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் என்று மீடியாக்கள் எப்போதும் இவரைப் புகழ்ந்து தள்ளுகின்றன. நம்ப முடியாத உத்திகளுடன், அபாரமாக தன் அணியை முன்னெடுத்துச் செல்பவர் என்று சக விளையாட்டு வீரர்கள் அவரைக் போற்றுகின்றார்கள். அழகன், இனிமையானவன், விளையாட்டுலக காசனாவோ என்று சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே பல பெண்கள் இவரை டாக் மற்றும் ட்வீட் செய்கிறார்கள். ஆஸ்திரேலியா அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ இவரை உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மென் என்கிறார்.  இவரது ஆக்ரோஷ‌மான ஆட்டத்துக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அடிமை. இப்படி ஊர் உலகமே கொண்டாடும் ஒருவர் தான் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி. செல்லும் இடங்களில் எல்லாம் வெல்லும் ஆற்றல், அளவில்லா எனர்ஜி, தீர்க்கம், நிதானம் மற்றும் தெளிவு இவை எல்லாம் இந்த இளம் வயதில் கோலிக்கு எப்படி நிகழ்ந்தது? தன்னுடைய உடல் மற்றும் மன வலிமைக்கு அவர் என்ன செய்கிறார்? கோலியிடம் கேட்கப்பட்ட சில ஹெல்த் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு இது.

சிக்கு என்று செல்லமாக அழைக்கப்படும் கோலியின் வயது 27, உயரம் ஐந்து அடி 9 அங்குலம், எடை 67 கிலோ. தன்னை முழுவதுமாக கிரிக்கெட்டுக்காக ஒப்படைத்தவர் அவர். எட்டு வயதில் தொடங்கிய அவருடைய இந்தப் பயணம் இம்மி பிசகாமல் கோடு பிடித்தபடி அதை நோக்கியே சென்றது. கோலியின் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரு ஒரே வார்த்தையில் சுருக்கிவிட முடியுமானால் அது கிரிக்கெட் என்று தான் சொல்ல முடியும். இன்றைய அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் விடாமுயற்சி மற்றும் 100 சதவிகிதம் கடின உழைப்பு. அதற்கு அவர் செய்து வரும் உடற்பயிற்சி. உடலை மெலிவாகவும் அதே சமயம் எஃகு போல் உறுதியுடனும் வைத்துக் கொள்வதென்பது சாமான்யமான விஷயமா என்ன? அதற்கு கோலியிடம் இருந்து இருக்கும் பதில் நினைத்தால் நிச்சயம் முடியும். ஒழுக்கம், முழு கவனம், மாற்றுக் குறையாத உறுதி இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் இது யாருக்கும் சாத்தியம் தான் என்பார்.

கோலி எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலை என்பது அவரது ஆட்டத்தின் மீது தான் இருக்கும். வேகமான ஒரு ரன் இயந்திரம் போல அவருடைய ஆட்டம் அனைவரின் இமை மூடாத கவனம் கோரும். ஆனால் அதன் பின் அவர் அமைதியின் பிள்ளையாகிவிடுவார். வெளியே செயல்திறனையும் உள்ளே அமைதியும் கொண்டிருக்கும் அபூர்வ விளையாட்டு வீரர் இவர். தவிர எல்லா சமயங்களிலும் பாசிட்டிவாக இருப்பதும் இயங்குவதும் கோலியின் இன்னொரு குணம். நேர்மறை எண்ணங்கள் தான் வெற்றிக்கான பாதைகளை உருவாக்கும் என்பதை மனதார நம்பிக் கடைப்பிடிப்பவர். தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் அதை வெளிப்படையாகச் சொல்லுபவர். இந்த பாசிட்டிவ் உணர்வு தான் தன்னுடைய துணிச்சலுக்கு உந்து சக்தி என்கிறார் அவர். பரபரப்பான விளையாட்டு வீரராக மட்டுமன்றி மகிழ்ச்சியும் அமைதியும் உள்ள மனிதராக இயல்பாக இருக்க முடிவதற்குக் காரணம் பாசிட்டிவிட்டி தான் என்று அறிந்துள்ளார். கோலியின் மற்றொரு நல்ல பழக்கம் அவர் கடைப்பிடிக்கும் ஒழுங்குமுறைகள். தான் நம்பிய ஒரு நல்ல விஷயத்தை இறுகப் பற்றிக் கொள்வதும், இடைவிடாமல் அதையே செய்வதும் கோலியின் பழக்கம். இது தியானம் செய்வதற்கு நிகரானது. 

உடல் வலிமையை அதிகரிக்க வொர்க் அவுட்ஸ் செய்வதன் அவசியத்தை நன்றாக உணர்ந்து அதைக் கடமைக்காகச் செய்யாமல் பெரும் விருப்பத்துடன் செய்வார் கோலி. வாரத்தின் ஐந்து நாட்கள் ஜிம் சென்று தொடர் பயிற்சி மேற்கொள்வார். அதன் பின் இரண்டு நாட்கள் ஓய்வு. இதுதான் அவருடைய ஃபிட்டென்ஸ் மந்திரம். எத்தகைய வேலை இருந்தாலும் ஜிம்முக்கு போகாமல் இருக்க மாட்டார். தினமும் கட்டாயம் இரண்டு மணி நேரப் பயிற்சி செய்வார். மேட்ச் இருக்கும் நாட்கள் அல்லது வெளியூருக்குச் செல்லும் சமயங்களில் மட்டும் தான் ஜிம்முக்கு போகாமல் இருப்பார். மற்ற நேரங்களில்  தீவிர பயிற்சி மேற்கொள்வார் அந்த அளவுக்கு தன் உடல் மீதான அக்கறை அவருக்குண்டு. அதனாலேயே வீட்டில் ஒரு ஜிம் அமைத்துள்ளார் இந்த ஃபிட்னெஸ் பிரியர். பெரும்பாலும் வொர்க் அவுட்ஸ் செய்பவர்கள் இரண்டு விதம். சிலர் பாடி பில்டிங்கிற்காகவும், சிக்ஸ் பேக்ஸ் வைப்பதற்காகவும் வெயிட் வொர்க் அவுட்ஸ் மட்டும் செய்வார்கள். இன்னும் சிலர் தசைகளை வலுவாக்க கார்டியோ வொர்க் அவுட்ஸ்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். விராட் கோலி இந்த இரண்டுக்கும் முக்கியவத்துவம் தருபவர். கார்டியோ செய்வதால் ஸ்டாமினா அதிகரிக்கும். வெயிட் வொர்க் அவுட்ஸ் பயிற்சிகளால் உடல் திண்மை அடையும் என்பதை நன்குணர்ந்தவர். இப்படி நுணுக்கமான அக்கறையினால் தான் அவர் தன்னுடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துள்ளார்.

ஐந்து நாள் கடுமையான பயிற்சிக்கு பின் தன் உடலுக்கு இரண்டு நாள் நல்ல ஓய்வு தருவார். அந்த ஓய்வு தன் உடலை ரிலாக்ஸ் செய்து புத்துணர்வை அதிகரிக்கச் செய்து மீண்டும் வொர்க் அவுட்ஸ் தொடங்குவதற்கான ஒத்துழைப்பைத் தரும் என்கிறார். வொர்க் அவுட்ஸ் செய்வதில் எப்படி உறுதியுடன் விடாமல் செய்வாரோ அதே போல ஓய்வையும் கடும் ஒழுங்குடன் கடைப்பிடிப்பவர் கோலி. சில சமயம் வொர்க் அவுட் செய்வது சலித்தால், வாலி பால் விளையாடக் கிளம்பிடுவார். அந்த விளையாட்டு கவனக் குவிப்பையும், விழிப்புணர்வையும் அதிகப்படுத்துகிறது என்பார். 
 
உணவுப் பழக்கத்தைப் பொருத்தவரையில் கோலி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. டயட்டிங் செய்து பழக்கமில்லை. நல்ல உணவைத் தேடி தேடி சாப்பிடும் உணவுப் பிரியர் இவர். வீட்டு உணவை பெரிதும் விரும்புவார். தன்னை உணவுப் பிரியர் என்று சொல்லிக் கொள்வதில் அவருக்கு பெருமை தான். மாவுச் சத்து அதிகமுள்ள உணவுகளையும் இனிப்புக்களையும் தவிர்க்கும் இவர் புரதச் சத்துள்ள உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வார். சர்க்கரை கலக்காத காபி தான் குடிப்பார். பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் தான் சாப்பிடுவார்.  வறுக்கப்பட்ட அல்லது எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களை கோலி தொடுவதில்லை. இரவு நேரத்தில் மெட்டாபாலிசம் குறைவாக இருக்குமென்பதால் இரவு எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளைத் தான் சாப்பிடுவார். ஆட்டிறைச்சி மற்றும் சால்மன் மீன் அவருக்கு எப்போதும் விருப்பமான உணவு. விதவிதமான மீன்களை சமைத்து சாப்பிடுவது நல்லது என்று மற்றவர்களுக்கும் அறிவுறுத்துவார். காரணம் அதில் தான் ஸ்டாமினா அதிகரிக்கச் செய்யும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொதுவாக அனேகம் பேருக்கு காய்ச்சல், அல்லது வேறு ஏதாவது சின்ன சின்ன வியாதிகள் வந்து உடல் நலத்தை சீர் குலைத்துவிடும். சத்துள்ள உணவும், உடற்பயிற்சியும் செய்து வருபவர்களுக்கு இந்த பிரச்னைகள் நிச்சயம் இருக்காது என்பார் கோலி. அதை நடைமுறைப்படுத்தியும் காண்பித்தும் உள்ளார். 

வெளிநாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆடிய டெஸ்டில் வீராட் கோலி பெற்றார். இதற்கு முன்பு 1990-ல் அசாருதீன் 192 ரன்னும், 1997-ல் சச்சின் தெண்டுல்கர் 168 ரன்னும் கேப்டன் பதவியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் ஆவர். இது வரை கோலி 42 டெஸ்டில் 12 சதம் அடித்துள்ளார். இதில் டாப் 5 வெளிநாட்டில் குவித்த ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில் கிடைத்த பெரும் புகழை தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவுடன் இருப்பது கோலியின் மற்றொரு சிறப்பான பண்பு. தன்னுடைய இந்த வெற்றிக்கு பின்னால் இருப்பவர் தன் அம்மா என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார். நல்ல உணவு என்பது நம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவு தான். அதை நமக்கான அன்புடன் பரிமாறும் நமக்கேயான ஒரே ஆத்மா அம்மா தான். வீட்டுச் சாப்பாடும், நல்ல சூழலையும் அமைத்துத் தருபவர் அம்மா தான் தன் எல்லா வெற்றிக்கும் தூண் என்று நெகிழ்ந்து சொல்வார். அதே சமயம் தோல்வி ஏற்பட்டாலும் உடைந்து போகாமல் அடுத்து என்ன என்று எதையும் நிதானமாக எதிர்கொள்ளும் பண்பும் அவரிடமிருந்து கற்றதே என்கிறார் இந்த அம்மா பிள்ளை.

சராசரி மனிதர்களுக்கும் வெற்றியாளர்களும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சராசரி மக்கள் எந்த ஒரு விஷயத்தையும், அது டயட்டாக இருக்கலாம், உடற்பயிற்ச்சியாக இருக்கலாம், அட்டகாசமாகத் தான் ஆரம்பிப்பார்கள். நாலைந்து நாட்கள் அதைச் செய்வார்கள் ஆனால் வெகு விரைவில் அலுத்துப் போய் விட்டுவிடுவார்கள். அதற்கு ஆயிரம் காரணங்களையும் சொல்வார்கள். ஆனால் வெற்றியாளர்கள் மட்டுமே தான் நம்பும் ஒரு விஷயத்தை தீவிரத்துடன் கடைப்பிடிப்பார்கள். ஒற்றைச் சிந்தனையில் அதை மட்டுமே மையப்படுத்தி வாழ்வார்கள். வீராட் கோலி என்ற வெற்றியாளர் இந்தியாவின் பெரிய ஐகானாக, வெற்றித் திருமகனாக, புகழின் உச்சியில் நிலைத்து நின்று சாதித்துக் கொண்டிருப்பதற்கான முக்கிய காரணம் அவருடைய அர்ப்பணிப்பு உணர்வுதான். தன்னை கிரிக்கெட்டு முழுவதும் ஒப்புக்கொடுத்துவிட்டதால் தான் அவரால் ரன் மிஷின் போல் செயல்படமுடிகிறது. ஒரு வேலையைச் செய்யும் போது அதுவாகவே மாறிவிடுவதென்பது தான் ஆகச் சிறந்த தியானம். கோலியின் வெற்றி இதைத் தான் நமக்கு உணர்த்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com