இந்திய அரசியலில் ஒளிமிக்க நம்பிக்கை நட்சத்திரம்

இந்திய அரசியலில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மதிப்புமிக்க அரசியல் தலைவர் ஜோதி பாசுவின் மறைவு இந்தியாவின் பொதுவாழ்வில் ஒரு மாபெரும் இழப்பு ஆகும். வாழ்நாள் முழுவதும் அரசியலில் பல்வேறு எதிர்ப்புகளையு
இந்திய அரசியலில் ஒளிமிக்க நம்பிக்கை நட்சத்திரம்

இந்திய அரசியலில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மதிப்புமிக்க அரசியல் தலைவர் ஜோதி பாசுவின் மறைவு இந்தியாவின் பொதுவாழ்வில் ஒரு மாபெரும் இழப்பு ஆகும். வாழ்நாள் முழுவதும் அரசியலில் பல்வேறு எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து நின்று, உள்ளம் தளராமல், தாம் கொண்ட கோட்பாடுகளுக்காக, தாம் சார்ந்த அரசியல் கட்சிக்காக-கூட்டணிக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராடி வெற்றி பெற்ற அவர், கடைசியில் தமது 96-வது வயதில் உடல்நிலை தளர்ந்து மருத்துவமனையில் பதினேழு நாள்கள் போராடி அமைதி அடைந்துவிட்டார்.

கோல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்து, சட்டத்துறையில் உயர்மட்ட பயிற்சி பெற அவர் இங்கிலாந்து சென்றார். அங்கு பார்-அட்-லா பட்டம் பெற்றதுடன், மார்க்சிய தத்துவத்தையும் நன்கு தெரிந்து,  1940-ல் உறுதி மிக்க பொதுவுடைமைவாதியாக இந்தியா திரும்பினார். வழக்குரைஞராக இருந்த திறமையை வைத்து நீதிமன்றங்களில் நின்று நிதிதேடும் போக்கில் ஈடுபடாமல், தொழிலாளர் வர்க்கத்துக்கு நீதி கிடைக்கத் தமது முழு நேரத்தையும் முழுவாழ்வையும் அவர் ஒப்படைத்தார். ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் ஒப்பற்ற தலைவராக விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1946 தேர்தலில் வங்காள சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1950-ல் ஜோதி பாசு, பிரமோத் தாஸ் குப்தா இருவரும் இணைந்து மேற்கு வங்காள கம்யூனிஸ்ட் கட்சி மாநில அமைப்பை நிறுவினார்கள். இது வேகமான வளர்ச்சியைப் பெறவில்லை. 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட நேரத்தில், தளர்ச்சியடையாமல், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் ஈடுபட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை எல்லாம் ஜோதி பாசு சமாளித்தார். 1967 நவம்பர் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பி.சி.கோஷ் தலைமையில் அமைந்த கூட்டணி வெற்றிபெற்றதும் அமைச்சரவையில் துணை முதல் அமைச்சர் பொறுப்பை ஜோதி பாசு ஏற்றார்.

அப்பொழுது ஒரு முறை அவர் தில்லிக்கு வந்திருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் இருந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் அனந்த நம்பியார் என்னை அழைத்துப்போய் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். எளிமையும் அமைதியும் அரசியல் நுணுக்கங்களில் தெளிவும் உள்ளவராக அவர் காணப்பட்டார். தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெற்ற வெற்றியை அவர் மிகவும் பாராட்டினார். நெருக்கடிகளில் அடங்கிவிடாமல் எதையும் சமாளிக்கும் வலிவும் தெளிவும் அவருக்கு இருந்தன.

பி.சி.கோஷ் மந்திரி சபை மூன்று மாதங்களில் கலைக்கப்பட்டது. அதன் பிறகு 1969 பிப்ரவரி தேர்தலில், பங்களா காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் முகர்ஜி தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி வெற்றி பெற்று, மீண்டும் ஜோதி பாசு துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 1970 மார்ச் மாதத்தில் அஜய் குமார் முகர்ஜி தமது பதவியைவிட்டு விலகியதும் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. 1972 மார்ச் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் அமைச்சரவை அமைந்தது. 1975 ஜூன் 25 நெருக்கடி காலப் பிரகடனம் வந்த பிறகு, ஜெயப்பிரகாசர் தலைமையில் போராடிய ஜனதா அமைப்பின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, ஆட்சியாளரின் அடக்குமுறை கோரத் தாண்டவமாடியது. ஜோதிர்மாய் போஸ் போன்ற அக்கட்சி முன்னணி உறுப்பினர்கள் பலர் சிறையில் தள்ளப்பட்டனர். அந்தக் கட்டத்திலும் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.கோபாலன் தலைமையில் நெருக்கடி கால காங்கிரஸ் ஆட்சியின் போக்கைக் கண்டித்து வந்தனர்.

நெருக்கடி காலம் முடிவடைந்து 1977 மார்ச் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் படு தோல்வி அடைந்து, ஜெயப்பிரகாசர் தலைமையில் அமைந்த ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்று, மத்தியில் முதல் தடவையாக காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பீடத்திலிருந்து கீழிறக்கப்பட்டது.

1977 ஜூன் மாதத்தில் நடைபெற்ற மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் ஜோதி பாசு தலைமையில் அமைந்த இடதுசாரிக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதும், அவர் தலைமையில் அமைச்சரவை அமைந்தது. மேற்கு வங்காளத்தில் அவர் கையாண்ட அரசியல் முறையும், அமைத்த முன்னணி அமைப்பும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. 1997 முதல் 2000 வரை, பதவியை விட்டுத் தாமாக விலகும்வரை, ஜோதி பாசு, 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். அவர் தலைமையில் ஒவ்வொரு சட்டசபைத் தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்க சட்டசபையில் தனிப்பட்ட பெரும்பான்மை பலத்தைப் பெற்று வந்திருக்கிறது. 294 இடங்கள் உள்ள மேற்கு வங்க சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற வரலாறு: 1977 தேர்தலில் 178 இடங்கள், அதேபோல் முறையே 1982(174 இடங்கள்), 1987 (187), 1991(187), 1996 (157). ஒவ்வொரு தேர்தலிலும் தனிப்பட்டு அவர் கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மையான பலம் கிடைத்தது என்றாலும், தனித்து ஆட்சி அமைக்காமல் கூட்டணிக் கட்சியினரையும் அமைச்சரவையில் இணைத்து, தேர்தலுக்குப் பிறகும் கூட்டணி என்பதற்கு முன்னுதாரணமாக ஒரு மதிப்பையும், மரியாதையையும் அவர் காட்டினார். அவரின் பெருந்தன்மையும், அரசியல் தெளிவும் கூட்டணி என்பதை அர்த்தமுள்ள அரசியல் முறையாக அங்கு நிலைபெறச் செய்தன.  

இந்திய அரசியலில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக அவர் இருந்தது ஓர் ஒப்பற்ற சாதனை என்றாலும், அதைவிட மேலாக உலகில் பொதுவுடைமை ஆட்சி அமையாத நாடுகளில் பல்வேறு கட்சிகள் போட்டியிடும் தேர்தல்முறை மூலம் நீண்டகாலம் ஆட்சியில் நீடித்து இருந்த பொதுவுடைமையாளர் ஜோதி பாசு ஒருவர் மட்டுமே என்ற சாதனையும் உலக அரசியலில் நிகழ்ந்துள்ளது.

1996 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், வேறு எந்தக் கட்சிக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை பலம் நாடாளுமன்ற மக்களவையில் கிடைக்கவில்லை. 545 உறுப்பினர்களை உடைய மக்களவையில் அதிகமான அளவில் 161 இடங்களைப் பெற்றிருந்த பாரதீய ஜனதா கட்சியை அமைச்சரவை அமைக்குமாறு குடியரசுத் தவைர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா அழைத்தார். அதன்படி அதன் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைத்த ஆட்சி, 1996 மே 16 முதல் 13 நாள்களே நிலைபெற்றது. மக்களவையில்  வைக்கப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் தோல்வியுற்றதால் மே 28-ல் அவர் தமது பதவியைவிட்டு விலகினார்.

அப்பொழுது ஜனதா தளம் அமைத்த கூட்டணிக்கு மக்களவையில் 332 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. 1989-90-ல் பிரதமராக இருந்த வி.பி.சிங்கை நாங்கள் பலமாக வலியுறுத்தியும் மீண்டும் பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார்.

மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ஆராய தில்லி பீகார் பவனில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிஷண் சிங் சுர்ஜித், மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசு, பொதுவுடைமை வலதுசாரிக் கட்சியின் தலைவர் இந்திரஜித் குப்தா, ஜனதா தளத்தின் வி.பி.சிங், ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் தீவிரமாக ஆராய்ந்தனர். ஜனதா தள ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் நானும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அப்பொழுது இருந்த நிலைமையில், பிரதம மந்திரி பொறுப்பை ஜோதி பாசு ஏற்கவேண்டும் என்று ஜனதா தளம் சார்பில் வி.பி.சிங், ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் பலரும் ஒரு மனதாக வற்புறுத்தினோம். அதனை இந்திரஜித் குப்தாவும் மற்ற கட்சியினரும் முழுமையாக ஆதரித்தனர்.

தமது கட்சியைக் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவெடுக்க முடியும் என்று ஹர்கிஷண் சிங் சுர்ஜித்தும், ஜோதி பாசுவும் கூறிவிட்டனர். கூட்டம் முடிவுற்றதும், ஹெக்டேயும், நானும் சுர்ஜித் சிங், ஜோதி பாசு இருவரையும் சந்தித்துப் பேசினோம். அவர்கள் இணங்கி வந்தாலும், மறுநாள் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்கள். அடுத்த இந்தியப் பிரதம மந்திரி ஜோதி பாசுதான் என்ற நல்லதொரு எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளிடம் இருந்தது. இதைச் செய்தித் தாள்களும் பெருமளவில் வெளியிட்டன.

மறுநாள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்று அக்கட்சி முடிவு எடுத்தது. அந்த முடிவு எங்களுக்கெல்லாம் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தந்தது. அதற்குப்பின் அமைந்த தேவ

கௌடாவின் அமைச்சரவையும், ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையும் ஒவ்வொன்றும் பத்து மாதங்களுக்கு மேல் நிலைபெறவில்லை. 1999 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஐந்தாண்டு கால ஆட்சியை அமைத்தது.

1996-ல் பிரதம மந்திரி பதவிக்கு ஜோதி பாசு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் கட்சி ஒப்புதல் அளித்திருந்தால், நிலையான கூட்டணி ஆட்சி மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கான திறமையும், அனுபவமும் ஜோதி பாசுவுக்கு இருந்தன. அதன் பிறகு, கூட்டணி முறையில் நிலையான ஆட்சியை மத்தியிலும், மாநிலங்களிலும் அமைக்கலாம் என்ற நம்பிக்கை இந்திய அரசியலில் வலுப்பெற்றிருக்கும்.

சில ஆண்டுகள் கழித்து, பிரதம மந்திரி பதவிக்கான வாய்ப்பைத் தவறவிட்டது வரலாற்றுப்பூர்வமான இமாலயத் தவறு என்று ஜோதி பாசுவே கூறினார்.

÷கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு ஜோதி பாசு இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு தவற விடப்பட்டது என்றாலும், அதைவிட உயர்ந்த பெருமையையும், பாராட்டத்தக்க தன்னலமற்ற பண்பாட்டையும் இந்திய அரசியல் வரலாற்றில் ஜோதி பாசு பெற்றிருக்கிறார்

ஜோதி பாசு, தமது பெயருக்கேற்றபடி, ஒளிமிக்க அரசியல் தலைவராக விளங்கினார். அவர் கூட்டணி ஆட்சிமுறைக்கு வழிகாட்டிய நம்பிக்கை நட்சத்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com