மத்திய அரசு- புதுவை முதல்வர் இடையே பனிப்போர்

புதுச்சேரி அரசின் நிதித்துறைச் செயலர் யார் என்பதில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கும் இடையே 
மத்திய அரசு- புதுவை முதல்வர் இடையே பனிப்போர்

புதுச்சேரி அரசின் நிதித்துறைச் செயலர் யார் என்பதில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கும் இடையே  பனிப்போர் நிலவுகிறது.

புதுச்சேரி நிதித்துறைச் செயலராக ராஜீவ் யதுவன்ஷி செயல்பட்டு வந்தார். இவருக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசின் கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வெளிக்கடன்கள் வாங்கும் பணியின் யதுவன்ஷி ஈடுபட்டார். ஆனால், அரசு ஊழியர்களின் சேமநல நிதி பணத்திலிருந்து திட்டங்களுக்கு நிதி மாற்றம் செய்யுமாறு முதல்வர் ரங்கசாமி கூறிய கருத்தை நிதித்துறைச்  செயலர் யதுவன்ஷி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதுபோல முன்னுரிமைத் திட்டங்களுக்கான செலவினங்களைப் பட்டியலிடுவதிலும் முதல்வருக்கும் யதுவன்ஷிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பிரச்னை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி ராஜீவ் யதுவன்ஷி தொழில் மற்றும் வர்த்தகத்துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டார். தலைமைச் செயலர் எம்.சத்தியவதியின் பரிந்துரையின் பேரில் இந்த உத்தரவில் துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து சுற்றுலாத்துறை செயலராக இருந்த டபிள்யு.வி.ஆர்.மூர்த்தி, நிதித்துறைச் செயலராக மாற்றப்பட்டார்.

நிதித்துறைச் செயலராக டபிள்யு.வி.ஆர்.மூர்த்தி பொறுப்பேற்ற அடுத்த நாளே, புதுச்சேரி அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யுமாறும், ராஜீவ் யதுவன்ஷியை மீண்டும் நிதித்துறைச் செயலராகப் பணியில் தொடரச் செய்யுமாறும் கூறி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், புதுச்சேரி அரசு அந்த கடிதத்துக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் ராஜீவ் யதுவன்ஷியை மாற்றியதில் விதிமீறல் இருக்கிறது. எனவே ராஜீவ் யதுவன்ஷியே மீண்டும் நிதிச் செயலராகத் தொடர வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, முதல்வர் என்.ரங்கசாமிக்குக் கடிதம் எழுதினார்.

ஆனால், இதற்கும் முதல்வர் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு, புதுச்சேரி தலைமைச் செயலர் சத்தியவதிக்கு உள்துறைச் செயலர் கடிதம் எழுதினார்.

இதையடுத்து தலைமைச் செயலர் சத்தியவதி, மீண்டும் புதுச்சேரி அரசின் நிதித்துறைச் செயலராக ராஜீவ் யதுவன்ஷி தொடர்வதற்கான  கோப்பை, முதல்வர் என்.ரங்கசாமி பார்வைக்கு அனுப்பினார்.

ஆனால், இன்றுவரை அந்த கோப்பு கிடப்பில் இருக்கிறது.

நிதித்துறைச் செயலர் மாற்றம், புதுச்சேரி அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்டதுதான் என்று முதல்வர் தொடர்ந்து கூறிவருவதாகவும், யதுவன்ஷியோடு நிலவும் கருத்து வேறுபாட்டால் இனி அவர் நிதித்துறைச் செயலர் பொறுப்பில் தொடரக்கூடாது என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலும் அவர் கோப்பைக் கிடப்பில் போட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் புதுச்சேரி அரசின் முக்கிய 4 பொறுப்புகளுக்கான அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மட்டுமே உண்டு.

அதன்படி தலைமைச் செயலர், நிதிச் செயலர், சட்டத்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோரை உள்துறை அமைச்சகம் மட்டுமே நியமிக்க முடியும்.

பிற துறைகளுக்கான செயலர்களை மத்திய அரசு அளித்த பிறகு, அவர்களுக்கு உரிய துறைகளை புதுச்சேரி அரசு ஒதுக்கீடு செய்ய முடியும் என்ற விதியை புதுச்சேரி அரசு மீறியிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், மத்திய அரசைப் பொறுத்தவரை, நிதித்துறைச் செயலராக ராஜீவ் யதுவன்ஷி தொடர்கிறார். இதை நிரூபிக்கும் வகையில் புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த மாநிலங்களின் நிதித்துறைச் செயலர்கள் கூட்டத்துக்கு ராஜீவ் யதுவன்ஷி அழைக்கப்பட்டார்.

அவரும் புதுச்சேரி சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இக்கூட்டத்தில் அந்தந்த மாநில அரசுகளுக்குத்  தேவைப்படும் நிதிகள், திட்டங்கள், அவற்றுக்கான மத்திய அரசின் ஒதுக்கீடுகள் குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆனால், புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை நிதித்துறைச் செயலராக டபிள்யு.வி.ஆர்.மூர்த்தி தொடர்கிறார். இதன் மூலம் நிதித்துறைச் செயலர் மாற்றம் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், முதல்வர் என்.ரங்கசாமிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

  புதுதில்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் புதுச்சேரி திரும்பிய பிறகே, நிதித்துறைச் செயலர் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

  மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தவரை மத்திய அரசுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே உறவு சுமுகமாக இருந்தது. ஷிண்டே மத்திய உள்துறை அமைச்சரான பின், உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரங்கசாமி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி மறைமுகமாக நெருக்குதலை ஏற்படுத்தி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com