தலைமை நீதிபதியானார் ஆர்.கே. அகர்வால்; 2 மாவட்ட நீதிபதிகள், 5 வழக்குரைஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ராஜேஷ் குமார் அகர்வால் (60), முழு நேரத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ராஜேஷ் குமார் அகர்வால் (60), முழு நேரத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, தலைமை நீதிபதியாக ஆர்.கே. அகர்வாலுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா வரும் வியாழக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இதேபோல, நீதித்துறையைச் சேர்ந்த வி. ரவி, ஜி. சொக்கலிங்கம், வழக்குரைஞர்கள் ஆர். மகாதேவன், கே. கல்யாணசுந்தரம், பி.என். பிரகாஷ், எஸ். வைத்தியநாதன், புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு வரும் அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 48 நீதிபதிகள் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் ஏழு பேர் பெண் நீதிபதிகள் ஆவர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவோர் பட்டியலில் ஜி.எம். வேலுமணி என்ற பெண் வழக்குரைஞர் பெயரும் இடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. அவரது நியமனம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் சில விளக்கங்களைக் கோரியதால் மீண்டும் அவரது நியமனம் தொடர்பான கோப்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய நீதிபதிகளின் வாழ்க்கைக் குறிப்பு:

பி.என்.பிரகாஷ்: 1961-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி பி.என்.பிரகாஷ் சென்னையில் பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பயின்றார்.

1983-ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் வழக்குரைஞர் பட்டம் பெற்றார். சென்னை வழக்குரைஞர் பார் சங்கத்தில் 1984-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வழக்குரைஞாக பதிவு செய்தார். குற்றவியல் பிரிவில் வழக்குரைஞராக பயிற்சி மேற்கொண்டார்.

பிறகு, 1993-ஆம் ஆண்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற போதைப் பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு வழக்குரைஞராகவும், 2003-ஆம் ஆண்டு தமிழகம், கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்களின் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் சிறப்பு வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார். பிறகு சிபிஐ, சுங்கத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சிறப்பு வழக்குரைஞராக பணியாற்றினார்.

2006-ஆம் ஆண்டு அனைத்து அரசுப் பதவிகளில் இருந்து விலகினார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி மேற்கொள்கிறார். சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரியில் சிறப்பு ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார். சென்னை சட்ட இதழின் ஆசிரியர்கள் குழுவில் இருந்த இவர், தமிழகத்தில் நடந்து வரும் வழக்குகள் தொடர்பாக பல கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா சத்தியநாராயணா: 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் புஷ்பா சத்தியநாராயணா பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1985-ஆம் ஆண்டு சட்டபடிப்பை முடித்தார். இதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி தமிழ்நாடு வழக்குரைஞர்கள பார் சங்கத்தில் வழக்குரைஞராக பதிவு செய்தார்.

முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் டி.ஆர்.ராஜகோபாலன் மற்றும் மூத்த வழக்குரைஞர் டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரிடம் தனது வழக்குரைஞர் பயிற்சியை தொடங்கினார். சச்சரவுகளைத் தீர்க்கும் சர்வதேச மையத்தின் நடுநிலையாளராக பயிற்சி மேற்கொண்டார்.

விளையாட்டு வீராங்கனையான இவர் தமிழ்நாடு மற்றும் சென்னைப் பல்கலைக்கழக ஹாக்கி அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டார். மேலும், பெண்களுக்கான கார் பந்தயங்களில் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். தமிழக அரசில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியாற்றிய ஆர்.பத்மநாபனின் மகள் ஆவார். பவன் சைபர்டெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் டி.எம்.சத்தியநாராயணாவின் மனைவியான புஷ்பா தற்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.கல்யாணசுந்தரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, மஞ்சநாயக்கம்பட்டியில் 1960-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி, கே. கல்யாணசுந்தரம் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த இவர் பி.ஏ. பொருளாதாரம் முடித்தார். 1985-ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம்

பயின்றார். 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மூத்த வழக்குரைஞர் ஏ.நடராஜனிடம் தனது வழக்குரைஞர் பயிற்சி மேற்கொண்டார். 1987-1991 வரை க.செங்கோட்டையனிடம் வழக்குரைஞர் பயிற்சியை மேற்கொண்டார். பிறகு தனியாக வழக்குரைஞர் பயிற்சியை மேற் கொண்ட இவர், சிவில் மற்றும் குற்றவியல் பிரிவில் பயிற்சி மேற்கொண்டார்.

பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் மிகுந்து ஆர்வம் கொண்டவர்.

எஸ். வைத்தியநாதன்: 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி, கோவையில் எஸ். வைத்தியநாதன் பிறந்தார். அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பட்டம் பெற்றார். பிறகு, சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படிப்பை

முடித்தார். நிர்வாக மேலாண்மை மற்றும் தொழிலாளர்கள் நலன் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். 1986-ஆம் ஆண்டு வழக்குரைஞராக பதிவு செய்த இவர் ஆர்.வைகை வழக்குரைஞரிடம் பயிற்சியை மேற்கொண்டார். இ.எஸ்.ஐ.யின் வழக்குரைஞராக இருந்தார்.

ஆர்.மகாதேவன்: 1963-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி ஆர்.மகாதேவன் சென்னையில் பிறந்தார். நங்கநல்லூரில் உள்ள நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பட்டப்படிப்பையும் இவர் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பயின்றார். 1989-ஆம் ஆண்டு வழக்குரைஞராக பதிவு செய்தார். சிவில் மற்றும் குற்றவியல் பிரிவில் வழக்குரைஞராக பயிற்சியை மேற்கொண்டார். மறைமுக வரி, சுங்கம் மற்றும் கலால் வரியில் பிரசித்தி

பெற்றவர். தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞராகவும், மத்திய அரசின் கூடுதல் அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மத்திய அரசின் மூத்த வழக்குரைஞர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

ஜி.சொக்கலிங்கம்: 1955-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தூத்துக்குடியில் பிறந்தார் ஜி. சொக்கலிங்கம். அங்கேயே பள்ளி மற்றும் பட்டப்படிப்பை முடித்தார். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எல். முதுகலை பட்டமும் பெற்றார். பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக இருந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவாளர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். பின்னர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com