மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல்: அஸ்ஸாமில் 76%, திரிபுராவில் 85% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான 9 கட்ட தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 6 தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல்: அஸ்ஸாமில் 76%, திரிபுராவில் 85% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான 9 கட்ட தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 6 தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அஸ்ஸாமில் 76 சதவீத வாக்குகளும், திரிபுராவில் 85 சதவீத வாக்குகளும் பதிவாகின.

அஸ்ஸாம் மாநிலத்தில் தேஜ்பூர், கோலியாபர், லக்கிம்பூர், ஜோர்ஹட், திப்ரூகர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்கிரஸ், பாஜக, திரிணமூல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 51 வேட்பாளர்கள் களம் காணும் இத்தேர்தலில் 8,588 வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்.

முதல்வர் தருண் கோகோய், அவரது மனைவி டோலி கோகோய் மற்றும் மகன் கெüரவ் கோகோய் ஆகியோர் ஜோர்ஹட் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

மோடி மாயாஜாலம் எடுபடாது: பின்னர், தருண் கோகோய் கூறுகையில், ""அஸ்ஸாமில் மோடியின் மாயாஜாலம் எடுபடாது. 14 தொகுதிகளில் 10 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும்'' என்றார்.

வாக்கு எந்திரங்கள் பழுது:

தேர்தலின்போது 40 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின. அவற்றில் 29 இடங்களில் மாற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டன. எஞ்சியவை உடனடியாக பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்டன.

இங்கு இம்மாதம் 12ஆம் தேதி 3 தொகுதிகளுக்கும், 24ஆம் தேதி 6 தொகுதிகளுக்கும் அடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திரிபுரா: இரு மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் மேற்கு தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவிலும் 1,605 வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். 

அகர்தாலாவில் வாக்களித்த முதல்வர் மாணிக் சர்கார் கூறுகையில், ""திரிபுராவில் மோடி அலை வீசுகிறது என்பதில் உண்மையில்லை. இது ஊடகங்களால் உருவாக்கப்பட்டவை'' என்றார்.

திரிபுரா கிழக்குத் தொகுதிக்கு இம்மாதம் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பந்த் பாதிப்பு?: புரூ இனத்தவர்கள் 11,000 பேர் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் 6 மாவட்டங்களில் பந்த் நடத்த அரசு சாரா ஒத்துழைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதையொட்டி 157 வாக்குச்சாவடிகளில் கட்சி முகவர்கள் வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியேறி விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com