12 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: மேற்கு வங்கம் 79%, மணிப்பூர் 74%, ஜார்க்கண்ட் 62%

மக்களவைக்கு 5ஆம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைக்கு 5ஆம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக 79 சதவீதமும், உள் மணிப்பூர் தொகுதியில் 74 சதவீதமும், பிகார் மாநிலத்தின் 7 தொகுதிகளில் 56 சதவீதமும், ராஜஸ்தானில் 20 தொகுதிகளில் 64 சதவீதமும், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் 69 சதவீதமும், ஜார்க்கண்டின் 6 தொகுதிகளில் 62 சதவீதமும், சத்தீஸ்கரில் 3 தொகுதிகளில் 64 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 5ஆம் கட்டத்தில்தான் அதிக தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

மாவோயிஸ்டுகள் தாக்குதல்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் மதியம் 2 மணி வரை 28 சதவீத வாக்குகளே பதிவாகின.

பொகாரோ மாவட்டத்தில் ரயில் பாதைகளை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதனால் அங்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. கிரிடி தொகுதியில் 10 வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர். பிஸ்தூர் வாக்குச்சாவடிக்கு அருகே மட்டும் 7 வெடிகுண்டுகள் தொடர்ந்து வெடித்தன.

ஜும்ரா மலைப்பகுதியில் துணை ராணுவப் படையினரின் வாகனம் மீது மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். அதில், துணை ராணுவப் படையினர் 3 பேர் மற்றும் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தனர்.

இந்த 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் பாஜக சார்பில் மக்களவை துணைத் தலைவர் கரிய முண்டா, மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சஹாய் ஆகியோர் ஜார்க்கண்டில் களத்தில் உள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிடும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களை நிர்பந்தம் செய்ததாக தேர்தல் அதிகாரி பாமியா சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தின் கூச்பிஹார், அலிபர்துவார், ஜல்பைகுரி, டார்ஜிலிங் ஆகிய 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. 4 தொகுதிகளில் முக்கிய வேட்பாளராக பாஜக சார்பில் எஸ்.எஸ். அலுவாலியா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கூச்பிஹார் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் பாஜக சார்பில் ஜிதேந்தர் சிங்கும் போட்டியிடுகிறார்கள். அந்தத் தொகுதியில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிகார்: பிகார் மாநிலத்தின் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, பாஜக வேட்பாளர் ராம்கிருபாள் யாதவ் ஆகியோர் போட்டியிடும் பாடலிபுத்திரம் தொகுதியில் 45 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

பாஜக சார்பில் நடிகர் சத்ருகன் சின்ஹா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் ஆர்.கே. சிங் ஆகியோர் 5ஆம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் பாட்னா சாஹிப் தொகுதிக்கு உள்பட்ட பக்தியார்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் 20 தொகுதிகளில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தின் முதல்வர் வசுந்தரா ராஜே ஜாலாவார் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜஸ்வந்த் சிங், பார்மர் தொகுதியில் வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com