போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

மீதைல் ஐசோ சயனேட் விஷவாயுவால் 1984 டிசம்பர் 2ஆம் தேதி இரவில் தாக்கப்பட்ட போபால் நகரம் அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மட்டுமல்ல, ஏறத்தாழ 18,000 டன் நச்சுக் கழிவுகளுடனும் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறது.

5. அவலத்தின் உச்சகட்டம்!

மீதைல் ஐசோ சயனேட் விஷவாயுவால் 1984 டிசம்பர் 2ஆம் தேதி இரவில் தாக்கப்பட்ட போபால் நகரம் அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் மட்டுமல்ல, ஏறத்தாழ 18,000 டன் நச்சுக் கழிவுகளுடனும் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நச்சுக் கழிவு, சுற்றுச்சூழலையும் அந்தப் பகுதி மண்ணையும் மட்டுமல்ல, நிலத்தடி நீரையும் மாசுபடுத்திய வண்ணம் தொடர்கிறது என்பதுதான் அவலத்தின் உச்சகட்டம்.

விஷவாயுத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே ஏறத்தாழ 15 ஆண்டுகளாக சுமார் 2,000 லாரிகள் கொள்ளுமளவிலான நச்சுக் கழிவுகள் 15 ஆண்டுகளாகவே சேர்த்து விட்டிருந்தது. அதை அந்த நிறுவனம் அகற்றி அழிக்கும் முயற்சியை மேற்கொள்ளவே இல்லை.

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிமருந்துத் தொழிற்சாலை 1969ஆம் ஆண்டில் போபாலில் தொடங்கப்பட்டது, அவ்வப்போது உருவாகும் நச்சுக் கழிவுகளை அகற்ற 21 தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1977இல், அதாவது எட்டு ஆண்டுகளில், அந்த 21 தொட்டிகள் நச்சுக் கழிவுகளைக் கொட்டி வைக்கப் போதுமானதாக இல்லை என்பது தெரிந்தது. உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க நச்சுக் கழிவுகளின் வெளியேற்றமும் அதிகரித்ததுதான் காரணம்.

அதனால் சூரிய ஒளியில் ஆவியாகும் விதத்தில் அமைக்கப்பட்ட 32 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளம் உருவாக்கப்பட்டது. தண்ணீருடன் கலந்து வெளியாகும் நச்சுக் கழிவுகள் இந்தக் குளத்தில் நிரப்பப்பட்டன. நச்சுக் கழிவு அவற்றில் நிரப்பப்பட்டு, அதிலிருந்த தண்ணீர் ஆவியாக்கி வெளியேற்றப்பட்டது. நச்சுக் கழிவு அந்தக் குளத்தின் அடியில் தங்கிவிடும். விரைவிலேயே அந்தக் குளம் நிரம்பிவிட்டதால், அதுபோல மேலும் இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன.

விபத்து நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1996இல் வெள்ளம் வற்றிப் போய் காய்ந்து கிடந்த இந்தக் குளங்களின் அடியில் கெட்டி பிடித்துத் தங்கியிருந்த நச்சுக் கழிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு ஒரே குளத்தில் கொட்டப்பட்டன. அந்தக் குளம் மண்ணால் மூடப்பட்டது. இந்தக் குளத்தில் மண்ணால் மூடப்பட்டுக் கிடக்கும் நச்சு எச்சத்தின் அளவு 18,000 டன்னுக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

போபால் நகரத்தைச் சுற்றியிருக்கும் மண்ணையும், நிலத்தடி நீரையும் இந்த நச்சுக் கழிவுகள் மாசுபடுத்தி வருகின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தின. மழை பெய்தால், போபால் நகரக் கிணறுகளிலும், நிலத்தடி நீர்க் குழாய்களிலும் உள்ள தண்ணீரில் விஷவாயுவின் துர்நாற்றம் வீசத் தொடங்கியபோது, பரவலாக எதிர்ப்பும், கூக்குரலும் எழுந்தன.

அரசிடம் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. 2004 ஜூலை மாதம் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் இந்த நச்சுக் கழிவுகளை உடனடியாக அங்கிருந்து அகற்றியாக வேண்டும் என்று கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் இதற்கு ஒரு முடிவு கட்டவும், அதற்கான பரிந்துரைகளைத் தெரிவிக்கவும் குழுவொன்றை அமைத்தது.

2005 ஜூன் மாதம், ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி மாநில அரசு ராம்கி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்கிற நிறுவனத்திடம் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள நச்சுக் கழிவுக் குளத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டது.

குவிக்கப்பட்டுள்ள நச்சுக் குப்பையை இன்சினரேட்டர் கருவி மூலம் எரிக்க வேண்டும் என்பதோடு, நச்சுக் கலந்திருக்கும் 18,000 டன் மண் அகற்றப்பட்டு, வேறிடத்தில் புதைக்கப்பட வேண்டும். முற்றிலும் விஷமாகிவிட்ட மூன்று கிணறுகளையும் மூட வேண்டும், நச்சுக் கலந்துள்ள நிலத்தடி நீரை மின்னேற்றி மூலம் இரைத்து வெளியேற்ற வேண்டும் என்று இந்த ஆய்வு நிறுவனம், அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. மண்ணை அகற்றுவதற்கு ரூ.117 கோடி செலவாகக்கூடும். நிலத்தடி நீரை வெளியேற்றும் மின்னேற்றிகள் அமைக்க ரூ.30 லட்சம் செலவாகும். இதன் பராமரிப்புச் செலவு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஆகலாம். இதெல்லாம் ராம்கி நிறுவனம் அளித்த கணக்கு.

அந்த நிறுவனம் நச்சுக் கழிவுக் குளத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றாமல், யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருந்த 346 டன் பூச்சிமருந்து, ஏனைய ரசாயனங்கள், 39 டன் சுண்ணாம்புக் கழிவு ஆகியவற்றை அந்தத் தொழிற்சாலையிலேயே உள்ள கிடங்கு ஒன்றில் சேகரித்து வைத்தது.

பீதாம்பூர் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள மத்தியப் பிரதேச நச்சு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இக்கழிவுகளை எரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அந்த ஹைதராபாத் நிறுவனத்திடம் நச்சுக் கழிவுகளை எரிக்கப் போதுமான நவீன கருவிகள் இல்லை என்று கூறப்படுகிறது. நச்சுக் கழிவுகளை எரிக்கும் வெள்ளோட்டத்தின்போது, 6 பணியாளர்களுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரைப்படி, 2006 அக்டோபர் மாதம் யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து சேகரிக்கப்பட்டிருக்கும் 385 டன் கழிவை குஜராத் மாநிலம் அங்கலேஸ்வரிலுள்ள பாரைச் என்விரோன்மென்டல் கட்டமைப்பு நிறுவனத்தின் தொழிற்கூடத்தில் எரியூட்டி அழித்துவிடும்படி ஜபல்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் குஜராத் மாநிலத்தில் இதற்கு ஏற்பட்ட பரவலான எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

அக்டோபர் 2009இல், மத்தியப் பிரதேச மாநிலத்திலேயே பீதாம்பூரில் அந்த நச்சுக் கழிவுகளை அழித்து விடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. 2010 ஜனவரியில் உச்சநீதிமன்றமும் இதற்கான உத்தரவைப் பிறப்பித்து, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உடனடியாக நச்சுக் கழிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் குறிப்பாக பிதாம்பூர் பகுதியில் எழுந்த பரவலான எதிர்ப்பால், நச்சுக் கழிவை பிதாம்பூருக்கு எடுத்துச் செல்வது இயலாது என்று மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துவிட்டது.

மத்திய அரசு 2011 மே மாதம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நச்சுக் கழிவை அழிப்பதற்கான உத்தரவு தரும்படி வேண்டியது அந்த மனு. அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், நாகபுரியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றம் இந்த முயற்சிக்கு 2011 ஜூலை மாதம் தடை விதித்துவிட்டது.

இதற்கிடையில், "ஜி.இ.இசட்.' (GEZ) என்கிற ஜெர்மன் நிறுவனம் மிக அதிகமான கட்டணத்திற்கு அந்த 346 டன் கழிவுகளை அப்புறப்படுத்தி தனது நாட்டில் ஹம்பர்க் நகரில் அதை அழித்துவிட முன்வந்தது. கழிவுகளை அந்த நிறுவனம் ஜெர்மனிக்கு எடுத்துச் செல்லுமா அல்லது இந்து மகா சமுத்திரத்தில் உள்ள ஏதாவது ஆளில்லாத தீவில் கொட்டுமா என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டாலும், இந்தியாவிலிருந்து நச்சுக் கழிவுகளை அகற்றினால் போதும் என்கிற மனநிலையில் இருந்தனர் மத்திய மாநில அரசுகளும், நீதிமன்றங்களும், பொதுமக்களும்.

மத்திய அரசின் அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலுடன் நச்சுக் கழிவுகளை ஜெர்மனிக்கு அனுப்பும் முயற்சிக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டது. எதிர்பார்த்ததுபோல, ஜெர்மனியில் பிரளயமே வெடித்தது. "இன்னொரு நாட்டின் நச்சுக் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா நமது ஜெர்மனி' என்கிற கோஷத்துடன் ஜெர்மானிய மக்கள் வெகுண்டெழுந்து விட்டனர். அந்த முயற்சிக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

இதற்கிடையில், விபத்து நடந்த இரண்டாம் ஆண்டே, அதாவது 1986இல், அந்தத் தொழிற்சாலையில் இருந்த குழாய்கள், பீப்பாய்கள், எஃகுத் தொட்டிகள் போன்றவை விற்கப்பட்டன. மீதைல் ஐசோ சயனேட், செலின் பயன்பாட்டுடன் பூச்சிமருந்து தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையின் பகுதிகள் மட்டும் அப்படியே விடப்பட்டன. அதேபோலத்தான், நச்சுக் கழிவுகள் தேக்கப்படும் இடங்களும்.

பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. செயலிழந்து கைவிடப்பட்ட யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு 5 கி.மீ. சுற்றளவிலுள்ள மண்ணும், நிலத்தடி நீரும் மாசுபட்டவை என்றும், அதில் பல்வேறு நச்சு ரசாயனங்கள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஐ-நாப்தால், நாப்தலின், செலின், தார் போன்ற கழிவு எச்சங்கள், பாதரசம், விஷத்தன்மையுடைய ஆர்கனோ குளோரின்கள், ஆவியாகும் தன்மையுள்ள ஆர்கனோ குளோரின் காம்ப்பவுண்டுகள், குரோமியம், செம்பு, ஈயம், நிக்கல், ஹெக்சோ குளோரோ ஈதேன், ஹெக்சோ குளோரோ ப்யூடாடீன், பூச்சிமருந்து எச்சங்கள் போன்றவை காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

யூனியன் கார்பைட் நிறுவனத்தின் கவனக் குறைவாலும், அவ்வப்போது உருவாகும் நச்சுக் கழிவுகளை அகற்றாமலும், அழிக்காமலும் சேர்த்து வைத்ததாலும் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், நிரந்தரமாக மண்ணையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தியதற்காகவும், அவற்றை அகற்றி அழிப்பதற்குப் போதிய இழப்பீடு கோரித் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுத்த அத்தனை வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அவையெல்லாம், இந்திய அரசும், மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர யூனியன் கார்பைடைப் பொறுப்பாளியாக்க முடியாது என்றுகூறி அந்த நீதிமன்றங்கள் வழக்கை விசாரணைக்கேகூட எடுத்துக் கொள்ளவில்லை.

தொழில் நிறுவனங்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை என்றால், அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நிலைதான் என்ன, வருங்காலச் சந்ததியரின் ஆரோக்கியத்துக்கு யார்தான் உத்தரவாதம் தருவது? என்று இது தொடர்பாக 6.12.10இல் தலையங்கத்தில் நாம் கேள்வி எழுப்பியிருந்ததை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

இத்துடன் முடிந்துவிடவில்லை நச்சுக் கழிவை அகற்றும் பிரச்னை. இதில் "டௌ' கெமிக்கல்சின் பாராமுகமும், மத்திய அரசின் இரட்டை வேடமும் அதைவிடக் கொடுமையானது. அதையும் விவரித்து இந்தத் தொடரை முடிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com