ஆந்திரத்தின் புதிய தலைநகர் அமராவதி:அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதையொட்டி, உத்தண்டராயுனி பாலம் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆந்திரத்தின் புதிய தலைநகருக்கான செயல் திட்டங்களை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஆந்திரத்தின் புதிய தலைநகர் அமராவதி:அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதையொட்டி, உத்தண்டராயுனி பாலம் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆந்திரத்தின் புதிய தலைநகருக்கான செயல் திட்டங்களை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் அமைந்த பிறகு ஆந்திரத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியின்படி, ஆந்திரத்தின் விஜயவாடாவுக்கும் குண்டூருக்கும் இடையே புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, குண்டூர் மாவட்டத்தில் "விஜயதசமி' நாளான வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வையொட்டி சிறப்பு பூஜையுடன் கூடிய யாகம், விழா மேடை அருகே நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். தெலுங்கு மொழியில் "மன மட்டி, மன நீரு, மன அமராவதி' (நமது மண், நமது நீர், நமது அமராவதி) எனக் குறிப்பிட்டு, ஆந்திரக் கவி ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவின் "நேனு சைதம்' கவிதை வரிகளை மேற்கோள்காட்டி, தில்லியில் இருந்து கொண்டு வந்த நாடாளுமன்ற வளாகப் பகுதியின் மண், யமுனை நதியின் நீர் ஆகியவற்றை அடிக்கல் நாட்டிய பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தெளித்து எந்திர பிரதிஷ்டை செய்தார்.

பின்னர் விழாவில் மோடி பேசியதாவது: மக்களின் தலைநகராக "அமராவதி' திகழும். புதிய நகரங்கள் அமைவதை பிரச்னையாகப் பார்க்காமல், நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருத வேண்டும். 2001-இல் குஜராத் மாநிலத்தில் புஜ் பகுதியில் நிகழ்ந்த பூகம்பத்துக்குப் பின் மீள்கட்டமைப்பு செய்யப்பட்ட கட்ச் மாவட்டம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். அந்த நிகழ்வுகளை படிப்பினையாகக் கொண்டே 100 நவீன நகரங்கள் திட்டத்தை நாடு முழுவதும் தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

"பதற்றத்தைத் தூண்டியது காங்கிரஸ்': ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்கும் நடவடிக்கையை மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த அரசு (காங்கிரஸ் கூட்டணி அரசு) அரசியல் சுயலாபத்துக்காக அவசர கோலத்தில் மேற்கொண்டது. மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் இரு தரப்பிலும் ஆறாத வலிகளை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் இளைஞர்களிடம் அவநம்பிக்கையை விதைத்து இரு தரப்பும் மோதலில் ஈடுபட முந்தைய காங்கிரஸ் அரசு தூண்டியது. ஆந்திரமோ, தெலங்கானாவோ, இரு மாநிலத்துக்கும் பொதுவான ஆன்மாவாக இருப்பது "தெலுங்கு' மொழி. அதை இரு தரப்பும் உணர வேண்டும்.

அண்மையில் நாடு முழுவதும் தெஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், மாநிலத்தைக் கட்டியெழுப்ப மத்திய அரசு அளித்த அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும்' என்றார் நரேந்திர மோடி.

சந்திரபாபு நாயுடு நம்பிக்கை: முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், "அமராவதி தலைநகருக்காக 35 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தாமாக முன்வந்து வழங்கிய சுமார் 25 ஆயிரம் விவசாயிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். புத்த கயை உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் இருந்து மண்ணும், புண்ணிய நதிகளின் நீரும் கலந்து இந்த தலைநகர் உருவாகவுள்ளது. இங்கு ஒன்பது நகரங்கள் உருவாக்கப்படும். தற்போது அளித்து வரும் உதவிகளை மத்திய அரசு தொடர வேண்டும். 2050-ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக ஆந்திரத்தை உருவாக்குவோம்' என்றார்.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவ் பேசுகையில் "அமராவதி தலைநகரின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தெலங்கானா அரசு வழங்கும்' என்று உறுதியளித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த "டிரம்ஸ்' சிவமணியின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிறப்பு அந்தஸ்து: பிரதமர் மௌனம் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுத்து வரும் கோரிக்கை குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற அமராவதி அடிக்கல் நாட்டு விழாவில் எதுவும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காத்தார்.

"ஆந்திரத்தின் புதிய தலைநகரில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஏற்கெனவே மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.1,500 கோடி போதாது; அனைத்துத் துறைகளிலும் ஆந்திரம் தன்னிறைவு பெறும் வரை மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்' என்பது சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை. இந்நிலையில், அமராவதி அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு அந்தஸ்து தொடர்பான அறிவிப்பையோ, தனது கருத்தையோ நரேந்திர மோடி வெளியிடுவார் என சந்திரபாபு நாயுடு உள்பட அம்மாநில மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத்தின் செயல்பாடு பற்றி புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, மத்திய அரசின் நிதியுதவி தொடர்பாக எதுவும் பேசவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com