விருப்பம்போல பேசுவேன்; செயல்படுவேன்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதிலடி

"விருப்பம் போல பேசுவேன்; செயல்படுவேன்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
விருப்பம்போல பேசுவேன்; செயல்படுவேன்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதிலடி

"விருப்பம் போல பேசுவேன்; செயல்படுவேன்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
 தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில், அதற்கு சவால் விடுக்கும் வகையில் மம்தா இவ்வாறு கூறினார்.
 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
 இந்நிலையில், ராணாகட் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியபோது, தனது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், விரும்பியதை பேசுவேன் என்றும் கூறினார்.
 இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
 புகார் புத்தகத்தை நீங்கள் (தேர்தல் ஆணையம்) மூடிவிட்டு, மாநிலத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் புகார்களை மட்டும் அடிப்படையாக கொண்டு செயல்படுவதை கைவிட வேண்டும். இந்த அவமதிப்பை மேற்கு வங்க மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
 7 திரிணமூல் தொண்டர்கள் இதுவரை கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தேர்தல் ஆணையம் இதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தது?
 நான் விருப்பப்பட்டதை பேசுவேன். விரும்பியதை தொடர்ந்து செய்வேன். யாரேனும் என்னை மிரட்டினால், நான் அவர்களுக்குப் பதிலடி கொடுப்பேன். காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதால், தேர்தலில் எங்களது வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றார் மம்தா பானர்ஜி.
 தேர்தல் ஆணையம் ஆய்வு: இதனிடையே, விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு எதிராக மம்தா பானர்ஜி பேசியிருப்பது குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து தேர்தல் ஆணைய கூடுதல் தலைமை அதிகாரி தீபேந்து சர்க்கார் கூறுகையில், "விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு, பல்வேறு பொதுக் கூட்டங்களிலும் அதுதொடர்பாக தனது கருத்துகளை மம்தா வெளியிட்டிருக்கிறார். அப்போது பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.க்களை தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் அனுப்பியுள்ளோம்' என்றார்.
 இதேபோல், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அனுப்ரதா மண்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com