மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: உடனடியாக அமல்

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயது 65-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, செவ்வாய்க்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு
மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: உடனடியாக அமல்

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயது 65-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, செவ்வாய்க்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியிருப்பதாவது: மத்திய சுகாதாரப் பணிகளின் கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 65-ஆக நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, மே 31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், 4,000 மருத்துவர்கள் பயன்பெறுவார்கள்.
 மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பதால், அனுபவமிக்க மருத்துவர்களை நீண்ட காலத்துக்கு நாம் தக்க வைத்து, மக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகளை அளிக்க முடியும். குறிப்பாக, ஏழை மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சுகாதாரத் துறை மேலும் வலுப்படுத்தப்படும். மேலும் மக்கள் நலன்சார்ந்த பல திட்டங்களை அமல்படுத்த முடியும். அரசு மருத்துவச் சேவைகளையே சார்ந்திருக்கும் ஏழை மக்கள் அதிகம் இதனால் பயன்பெறுவர் என்றார் அவர்.
 முன்னதாக, மத்திய அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ""நாடு முழுவதும் அதிக அளவில் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், அந்தப் பணியிடங்களை எனது தலைமையிலான அரசு இரண்டு ஆண்டுகளில் நிரப்புவது கடினமான விஷயம். எனவே, மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 65-ஆக நீட்டிப்பது குறித்து மத்திய அமைச்சரவை ஒரு வாரத்தில் முடிவெடுக்கும்'' என்றார்.
தமிழகத்துக்குப் பொருந்தாது
 டாக்டர்களின் ஓய்வு வயதை 65-ஆக உயர்த்தியுள்ள மத்திய அரசின் உத்தரவு, தமிழக அரசு டாக்டர்களுக்குப் பொருந்தாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ""அரசு ஊழியர்களைப் போன்று தமிழக அரசு டாக்டர்களின் ஓய்வு வயதும் தற்போது 58-ஆக உள்ளது. ஓய்வு வயதை நிர்ணயிப்பது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். தமிழக அரசு டாக்டர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பதை அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்கெனவே எதிர்த்து வருகின்றனர். எனவே, மத்திய அரசின் உத்தரவு தமிழக அரசு டாக்டர்களுக்குப் பொருந்தாது'' என்று அதிகாரிகள் கூறினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com