முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு குறைக்கப்படாது: வெங்கய்ய நாயுடு

முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு குறைக்கப்படாது: வெங்கய்ய நாயுடு

புது தில்லி: முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
அவசர மருத்துவ ஊர்தி, தீத்தடுப்பு வாகனங்கள் போன்ற அவசர கால ஊர்திகளைத் தவிர, மற்ற முக்கியப் பிரமுகர்கள் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சுழல் விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டின் நலன் கருதி, முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டியது அவசியாகும். எனவே, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மற்றபடி, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை.
ஒவ்வொருவரும் முக்கியப் பிரமுகரே, இதுவே நமது அரசின் தத்துவம்.
முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களில் உள்ள சுழல் விளக்குகளை அகற்றும் நடவடிக்கை, சிறியதொரு தொடக்கமாக இருந்தாலும், ஒவ்வொருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற செய்தியை உணர்த்துகிறது.
வாகனங்களில் சுழல் விளக்குகளைப் பயன்படுத்தும் நடைமுறைக்கு அனைத்து மாநில அரசுகளும் முடிவு கட்டும் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அரசுகள், மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கைப் பொருத்தவரை, நீண்டகாலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், புதிதாக எதுவும் நடந்துவிடவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com