மும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தாவா ஆகிய பயங்கரவாத அமைப்புகளே காரணம் எனத் தெரியவந்தது.
மேலும், அந்த அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சயீது மற்றும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டோருமே இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மும்பை தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமான ஹஃபீஸ் சயீது உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு இந்தியா வலியுறுத்தியது. மேலும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ஹஃபீஸ் சயீது உள்ளிட்டோரை கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலை செய்தது.
ஆனால், ஹஃபீஸ் சயீதுக்கு எதிரான ஆதாரங்களை இந்தியா பல முறை சமர்ப்பித்தும் பாகிஸ்தான் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விசாரிக்க முடியாது - பாகிஸ்தான்: இந்நிலையில், இந்த வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தக் கோரி பாகிஸ்தானிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு தற்போது நிராகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்கத்தைச் சேர்ந்த அதிகாரி, பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. ஹஃபீஸ் சயீதை அஜ்மல் கசாப் ஒருமுறை சந்தித்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இதனை எவ்வாறு ஆதாரமாக கருத முடியும்?
மும்பை தாக்குதல் வழக்கில் ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை இந்தியா அளித்தால், அதுதொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேசமயத்தில், இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் தருவாயில் உள்ளதால் வழக்கை மறுவிசாரணைக்கு உள்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்றார் அவர்.
இந்தியா கவலை: இதனிடையே, மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர்கள், பாகிஸ்தானில் இன்னமும் சுதந்திரமாக இருப்பது கவலையளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே வியாழக்கிழமை கூறியதாவது: மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பாகிஸ்தான் அரசின் பொறுப்பு. ஆனால், மும்பை தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 8 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அதன் சதியாளர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவது கவலையளிப்பதாக உள்ளது என்றார் கோபால் பாக்லே.
எனினும், மும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரணைக்கு உள்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்தது குறித்து அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com