பாலஸ்தீனம்: இந்தியாவின் நிலைப்பாடு மாறாது

பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாறாது; அது நிலையானது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாறாது; அது நிலையானது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்தது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் தில்லியில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மூன்றாவது நாடு தீர்மானிக்க முடியாது. அந்நாட்டின் மீதான நிலைப்பாடு இந்திய அரசின் தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அது எப்போது மாறாது; நிலையானது என்றார் ரவீஷ்.
ஜெருசலேம் நகரை பாலஸ்தீனம் தனது தலைநகரமாக பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்ற நிலையில், அமெரிக்க நிலைப்பாடு உலக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் கருத்து பலவீனமானது-ஒமர்: இதனிடையே, ஜெருசலேம் விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து பலவீனமானது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான சுட்டுரையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், "இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் நகரை அறிவிக்க இதற்கு முன்பு அமெரிக்கா முயற்சி செய்தபோது இந்தியாவின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மத்திய அரசின் நிலைப்பாடு பலவீனமாக உள்ளது' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு: ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com