வன்முறை தீர்வல்ல! 'பத்மாவதி' சர்ச்சை பற்றி ஆமிர் கான்

'பத்மாவதி' திரைப்பட சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் ஆமிர் கான், ஜனநாயக முறைப்படியே போராட்டங்கள் நடைபெற வேண்டுமே தவிர, அவை வன்முறையாக மாறக் கூடாது
வன்முறை தீர்வல்ல! 'பத்மாவதி' சர்ச்சை பற்றி ஆமிர் கான்

'பத்மாவதி' திரைப்பட சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் ஆமிர் கான், ஜனநாயக முறைப்படியே போராட்டங்கள் நடைபெற வேண்டுமே தவிர, அவை வன்முறையாக மாறக் கூடாது என்று கூறியுள்ளார்.
நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது மிகவும் மோசமாக நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட படம் 'பத்மாவதி'. வரலாற்றைத் தவறாகச் சித்திரித்து படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் படத்தை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தடை விதித்தன.
அந்தப் படத்துக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழும் கிடைக்கவில்லை. இதனால், படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் ஆமிர் கான், இதுகுறித்து, தெரிவித்திருப்பதாவது: 'பத்மாவதி' திரைப்படம் குறித்து நேரடியாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேவேளையில், அதுதொடர்பாக சில கருத்துகளை முன்வைக்க விழைகிறேன். பொதுவாக, நாட்டில் உள்ள அனைவருக்கும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட உரிமை உண்டு. ஆனால், அது ஜனநாயக முறைப்படிதான் இருக்க வேண்டும். மாறாக, வன்முறையாக மாறக் கூடாது. ஒரு திரைப்படத்தை முன்னிறுத்தி கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவது துரதிருஷ்டவசமானது என்றார் ஆமிர் கான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com