தொலைபேசி உரையாடல் பதிவு குற்றச்சாட்டு: முகுல் ராய் மனு தள்ளுபடி

மேற்குவங்க போலீஸார் தனது தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்ததாக குற்றம்சாட்டில், முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

மேற்குவங்க போலீஸார் தனது தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்ததாக குற்றம்சாட்டில், முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த செப்டம்பர் மாதம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த இடைநீக்கம் செய்யப்பட்ட முகுல் ராய், பின்னர் பாஜகவில் இணைந்தார். தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்துவிட்டார்.
இந்நிலையில், தனது தொலைப்பேசி உரையாடல்களை மேற்குவங்க போலீஸார் பதிவு செய்வதாகவும், தனது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பதாகவும் குற்றம்சாட்டி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, மேற்கு வங்க மாநில அரசு மற்றும் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முகுல் ராயின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யவில்லை. அவரைக் கண்காணிக்கவும் இல்லை என்று கூறி மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்க அரசு, மாநில காவல்துறை தலைவர் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முகுல் ராயின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com