காங்கிரஸ்: ராகுல் சந்திக்கப்போகும் சவால்கள்...

நாட்டின் பாரம்பரியமிக்க கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 47 வயதான ராகுல் காந்தி. தற்போதைய சூழலில், நேருவின் வம்சாவளி என்பது மட்டுமே அவருக்கு அப்பதவி கிடைத்தற்கான முதன்மையான காரணமாகப்
காங்கிரஸ்: ராகுல் சந்திக்கப்போகும் சவால்கள்...

நாட்டின் பாரம்பரியமிக்க கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 47 வயதான ராகுல் காந்தி. தற்போதைய சூழலில், நேருவின் வம்சாவளி என்பது மட்டுமே அவருக்கு அப்பதவி கிடைத்தற்கான முதன்மையான காரணமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளின் வாதமும் அதுதான். அந்தக் கூற்றை உடைத்தெறிய வேண்டுமானால் ராகுல் சந்திக்க வேண்டிய சவால்களும், சாதித்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளும் நிறைய உள்ளன.
காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தபோது இந்திரா காந்தியும், ராஜீவும் சிம்மாசனத்தில் அமர்ந்தனர். அப்போதைய நிலைமை வேறு; அதேபோன்று மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல்களுடன் சோனியா பதவியேற்ற காலநிலை வேறு. ஆனால், ராகுல் காந்திக்கு அப்படி ஒரு வழிகாட்டுதலோ, வாய்ப்புகளோ தற்போது இல்லை. கட்சியின் நிலைமை மோசமாக இருக்கும் இத்தருணத்தில் அதை வளர்த்தெடுக்க வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்துள்ளது.
அதிலும் அண்மைக்காலமாக பாஜக அடைந்து வரும் அசுர வளர்ச்சிக்கு முன்பு ராகுலின் அரசியல் சதிராட்டங்கள் எடுபடுமா? என்பது மிகப் பெரிய கேள்வி. அப்படியே எதிரிகளை வீழ்த்த அவர் செயல்திட்டங்களை வகுத்தாலும், அதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்களா? என்பதும் சந்தேகமே.
நாடு முழுவதும் கொடி நாட்டி வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. அதை மாநில அளவில் பலப்படுத்துவதற்கு முன்பாக, வட்டக் கிளை அளவில் இருந்து வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ராகுலுக்கு உருவாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் பலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை. இத்தகைய சூழலில் ஆளுங்கட்சியை எதிர்த்து வழக்கம்போல காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபட்டால் ராகுலின் தலைமைக்கு எந்தத் தனித்துவமும் இருக்காது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. எனவே, நாடாளுமன்ற செயல்பாடுகளும் அவருக்குக் காத்திருக்கும் மற்றொரு சவால்.
இவற்றை எல்லாம் தாண்டி எதிர்வரும் 2019-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தல்தான் ராகுலுக்கான பலப்பரீட்சை. அந்தத் தேர்தலுக்குப் பிறகு வெளியாகப் போவது வெறும் முடிவுகள் மட்டும் அல்ல. ராகுலின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் தலையெழுத்தும் கூட.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com