புது தில்லி ரயில் நிலையத்தில் மாதந்தோறும் அடைக்கலமாகும் 600 "ரயில்வே' குழந்தைகள்!

புது தில்லி ரயில் நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக 600 "ரயில்வே குழந்தைகள்' அடைக்கலம் ஆவதாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
புது தில்லி ரயில் நிலையத்தில் மாதந்தோறும் அடைக்கலமாகும் 600 "ரயில்வே' குழந்தைகள்!

புது தில்லி ரயில் நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக 600 "ரயில்வே குழந்தைகள்' அடைக்கலம் ஆவதாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

யாரிந்த ரயில்வே குழந்தைகள்?: வறுமை காரணமாகவோ, பெற்றோரின் கண்டிப்பு காரணமாகவோ வீட்டை விட்டு வெளியேறி, ரயிலில் பெரு நகரங்களை நோக்கி புறப்படும் குழந்தைகளுக்கு, அந்த நகரங்களின் ரயில் நிலையமே முதல் அடைக்கலமாக அமைகிறது. இவ்வாறு ரயில் நிலையங்களையே தங்களது வீடாக்கி கொண்டு வாழத் தொடங்கும் குழந்தைகளையே  "ரயில்வே குழந்தைகள்' என்று ரயில்வே பாதுகாப்புப் படையினரும், சமூக ஆர்வலர்களும் அழைக்கின்றனர்.

புது தில்லி ரயில் நிலையத்தில்..: புது தில்லி ரயில் நிலையத்தைப் பொருத்தவரையிலும், மாதந்தோறும் சராசரியாக 600 ரயில்வே குழந்தைகள் அடைக்கலமாகின்றனர் என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: இக்குழந்தைகள், பெரும்பாலும் உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்தே வருகின்றனர்.  திருத்தப்படாத தலைமுடி,  அழுது அழுது வறண்டு போன கண்கள், அழுக்குப் படிந்த உடை என அவர்களது தோற்றத்தை வைத்தே கண்டுபிடித்து விடுவோம். பின்னர்,  அவர்களது விவரங்களைப் பதிவு செய்து கொண்டு,  குழந்தைகள் மன நல ஆலோசனை மையங்களுக்கு அனுப்புவோம்.  அங்கு ஆலோசனை பெற்ற பிறகும், தங்களது வீடுகளுக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளை, அரசுக் காப்பகங்களுக்கு அனுப்பிவைப்போம் என்றார் அந்த அதிகாரி.

இதுபோன்ற குழந்தைகள் மீட்கப்படும் வரை, அவர்களது வாழ்வு பரிதாபகரமானது; ரயில் நிலைய குப்பைத் தொட்டிகளில் சிதறிக் கிடக்கும் உணவுகளைச் சாப்பிட்டு வாழும் நிலையில் இருப்பர் என்று தொண்டு நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

தில்லி ரயில் நிலையங்களில் அடைக்கலமாகும் குழந்தைகளை மீட்பதற்காக, ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் 4 தனியார் தொண்டு நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன.

குழந்தைகளின் கண்ணீர் கதை: புது தில்லி ரயில் நிலையத்தையே தங்களது வீடாக்கிக் கொண்டு வாழ்ந்து வந்த ராகுல் மிஸ்ரா (10), ரோஹித் சிங் (12), ரூபக் (15) ஆகிய சிறுவர்கள் தொண்டு நிறுவனத்தினரால் அண்மையில் மீட்கப்பட்டனர்.

இவர்களில் ராகுல் மிஸ்ரா பிகார் மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். தன்னையும் தனது தாயையும் தினமும் அடித்து துன்புறுத்தி வந்த தந்தைக்கு பயந்து, கடந்த 6 வாரங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ராகுல். தனது தாயே 200 ரூபாய் கொடுத்து ரயிலில் வேறெங்காவது சென்றுவிடுமாறு கூறியதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

பிகாரில் இருந்து தில்லிக்கு ரயில் ஏறிய ராகுல், புது தில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கேயே தங்கிவிட்டார்.

இதேபோல, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ரோஹித் (12), குடும்ப வறுமையால் வேலைக்காக தில்லி வந்துள்ளார். அவருக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த நபரை சந்திக்க முடியாததால், புது தில்லி ரயில் நிலையத்திலேயே வசிக்கத் தொடங்கிவிட்டார்.
வயிற்றுப் பிழைப்புக்காக, பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்று வந்த ரோஹித்துக்கு திடீரென டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தொண்டு நிறுவனத்தினரால் மீட்கப்பட்டார்.

தனது குடிகார தந்தைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் ரூபக்கின் (15) நிலை பரிதாபகரமானது. புது தில்லி ரயில் நிலையத்தில் அடைக்கலமான ரூபக், மதுவுக்கும், போதைப் பொருளுக்கும் அடிமையானார். அவரை மீட்டு தொண்டு நிறுவனத்தினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபோன்ற குழந்தைகளை மீட்டு பாதுகாப்பதற்கு உரிய சட்டங்கள் இருந்தாலும், அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com