எதிர்க்கட்சிகளின் அமளி எதிரொலி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் அமளி எதிரொலி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பிரச்னை எழுப்பினர். தங்கள் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில் பாஜக எம்.பி.க்கள் வீரேந்திர குமாரும், நந்தகுமார் சிங் சௌஹானும் தனக்கு எதிராக தலித் சமூகம் தொடர்பாக சில குற்றச்சாட்டுகளை எழுப்பியதாகக் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் எம்.பி. பதவியை விட்டு தாம் விலகுவதாகவும், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை 2 எம்.பி.க்களும் நிரூபிக்கத் தவறினால் அவர்கள் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் சிந்தியா தெரிவித்தார். அப்போது அவரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். 'எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக தலித்துகளின் நலவாழ்வுக்காக அவையில் குரல் எழுப்பி வருவபர் சிந்தியா' என்று அவர் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து சிந்தியா, காந்திலால் பூரியா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கோஷங்களை எழுப்பினர். அப்போது அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் குறுக்கிட்டு, ஒவ்வொரு எம்.பி.யும் தனது கருத்தைத் தெரிவிக்க அனுமதியளிக்க தாம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். அப்போது, காங்கிரஸ் எம்.பி.க்களின் குற்றச்சாட்டுககக்கு ஆளும் பாஜக எம்.பி.க்களும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அவையில் பலத்த அமளி நிலவியது.
இதனால் அதிருப்தியடைந்த அவைத் தலைவர் சுமித்ரா, அவையின் அதிகாரிகளுக்கோ, செயலாளருக்கோ தவறுதலாக ஏதாவது தீங்கு இழைக்கப்பட்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார். இவ்வாறு அமளியில் ஈடுபட்டால் அவையை எவ்வாறு நடத்துவது? என்று அவர் கண்டிப்புடன் கேள்வி எழுப்பினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசுகையில் 'எதிர்க்கட்சிகளும் அவை சுமுகமாக நடைபெறுவதையே விரும்புகின்றன. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்' என்றார்.
அமளி நீடித்ததைத் தொடர்ந்து அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் 3 மணிக்குக் கூடியபோதும் அமளி நீடித்தது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com