தொலைந்துபோன ஏடிஎம் அட்டையை உடனடியாக முடக்காத வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்! 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

வாடிக்கையாளர் ஒருவரின் திருடுபோன ஏடிஎம் அட்டையை முடக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி,
தொலைந்துபோன ஏடிஎம் அட்டையை உடனடியாக முடக்காத வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்! 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

வாடிக்கையாளர் ஒருவரின் திருடுபோன ஏடிஎம் அட்டையை முடக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி, எஸ்பிஐ வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதத்தை தில்லி மாநில நுகர்வோர்  குறைதீர் ஆணையம் விதித்தது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பறிகொடுத்த  ரூ. 1.29 லட்சத்துடன் அபராதத் தொகையான ரூ. 1 லட்சத்தையும் சேர்த்து ரூ. 2. 29 லட்சம் வழங்க வங்கிக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தில்லியின் ஓக்லா பகுதியைச் சேர்ந்த ரஹிமுன்னிஷா ஷஹானா என்ற பெண், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில்,  "2006, மார்ச் 13-ஆம் தேதி எனது கைப்பை திருடுபோனது. அதில், எஸ்பிஐ வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஏடிஎம் அட்டையும்,  ரகசிய எண்ணுடன் கூடிய காகித உறையும் இருந்தது. இதையடுத்து, நிஜாமூதின் பகுதியிலுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்றேன். அங்கு ஒரு அதிகாரியை சந்தித்து,  திருடுபோன எனது ஏடிஎம் அட்டையை முடக்கும்படி கேட்டுக் கொண்டேன். பின்னர், 2 வாரங்கள் கழித்து அந்த வங்கி கிளைக்கு மீண்டும் சென்று விசாரித்தேன். அப்போது, எனது வங்கிக் கணக்கில் இருந்த 1.29 லட்சம் பணம் முழுவதும் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. திருடுபோன எனது ஏடிஎம் அட்டை மூலம் அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் அட்டையை முடக்க உறுதியான நடவடிக்கைகளை வங்கி அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதனால்தான், நான் பணத்தை இழக்க நேரிட்டது' என்று அந்த பெண் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால், ஏடிஎம் அட்டையை கவனத்துடன் எடுத்துச் செல்லாமல்,  அலட்சியமாக செயல்பட்டிருப்பதாக அந்த பெண் மீது எஸ்பிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், கைப்பை திருடு போனதாக கூறப்படும் நாளில் அந்த பெண் வங்கிக்கு வரவே இல்லை என்றும் வாதிடப்பட்டது.

ஆனால், எஸ்பிஐ தரப்பு வாதங்களை ஏற்காத மாவட்ட நுகர்வோர் ஆணையம், அந்த பெண் பறிகொடுத்த ரூ.1.29 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தில்லி மாநில நுகர்வோர் ஆணையத்தில் எஸ்பிஐ சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை திங்கள்கிழமை தள்ளுபடி செய்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்,  எஸ்பிஐ வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது.

இதுதொடர்பாக நுகர்வோர் ஆணைய உறுப்பினர் என்.பி.கௌசிக் கூறியதாவது:
வாடிக்கையாளரின் திருடுபோன ஏடிஎம் அட்டையை முடக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எஸ்பிஐ வங்கி தோல்வியடைந்துவிட்டது. இது அப்பட்டமான சேவை குறைபாடாகும். சம்பவம் நடைபெற்று 11 ஆண்டுகள் ஆகியும், ஒரு பைசாக் கூட அந்த வாடிக்கையாளருக்கு திருப்பித் தரப்படவில்லை. அவருடைய ரூ.1.29 லட்சம் பணம் உடனடியாக திருப்பித் தரப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில், எஸ்பிஐ  வங்கி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது, அற்பத்தனமானது. எனவே, ரூ.1 லட்சம் அபராதத்துடன் அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com