காஷ்மீர் அசாதாரண சூழல்: ராணுவத்தினர் சுயமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்

காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழலை திறம்படக் கையாள ராணுவத்தினருக்கு பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங்
காஷ்மீர் அசாதாரண சூழல்: ராணுவத்தினர் சுயமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்

காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழலை திறம்படக் கையாள ராணுவத்தினருக்கு பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் போராட்டம் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அப்போது பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்துவதுடன் வன்முறைச் சம்பவங்களையும் அரங்கேற்றுகின்றனர்.
வேண்டுமென்றே காஷ்மீரில் பதற்றமான சூழலை உருவாக்கும் நோக்கில் இத்தகைய சம்பவங்களை பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் பின்னாலிருந்து இயக்குவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு நடுவே, காஷ்மீரின் பழம்பெரும் ஜாமியா மசூதி அருகே காவல்துறை டிஎஸ்பி ஒருவரை மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் லக்னெள அருகே அமைந்துள்ள ஆயிஷ்பாக் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் முலாயம் சிங் யாதவ் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்த நிலையை மாற்றி அமைதியை நிலவச் செய்யவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராணுவத்தினருக்கு பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும். அதேபோன்று பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை சுயமாக எடுப்பதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சில கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிப்பதை முலாயம் தவிர்த்துவிட்டார்.
முன்னதாக, சிறப்புத் தொழுகையில் முலாயம் பங்கேற்பதற்கு சற்று நேரம் முன்புதான் அவரது மகனும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் அங்கு வந்து சென்றார். அகிலேஷுடன் இணைந்து தொழுகையில் பங்கேற்பதைத் தவிர்க்கவே அவர் புறப்பட்ட பிறகு முலாயம் வந்ததாகத் தெரிகிறது. இதன் மூலம், அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவது வெளிப்படையாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com