இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு மீட்கப்பட்ட முஸ்லிம் மத குருமார்கள் நன்றி

பாகிஸ்தானில் காணாமல் போய் ஒரு வாரம் கழித்து மீட்கப்பட்ட தில்லியைச் சேர்ந்த சூஃபி முஸ்லிம் மத குருமார்கள் இரு நாட்டு அரசுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை திங்கள்கிழமை சந்தித்த சூஃபி மத குருமார்கள் சையது ஆசிஃப் நிஸாமி, நஸீம் அலி நிஸாமி.
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை திங்கள்கிழமை சந்தித்த சூஃபி மத குருமார்கள் சையது ஆசிஃப் நிஸாமி, நஸீம் அலி நிஸாமி.

பாகிஸ்தானில் காணாமல் போய் ஒரு வாரம் கழித்து மீட்கப்பட்ட தில்லியைச் சேர்ந்த சூஃபி முஸ்லிம் மத குருமார்கள் இரு நாட்டு அரசுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
எனினும், தாங்கள் திடீரென காணாமல் போனதற்கான காரணத்தை அவர்கள் முழுமையாகத் தெரிவிக்கவில்லை. எனினும், அவர்கள் இருவரும் சிந்து மாகாணத்தின் உள்பகுதிக்குள் சென்றதால் செல்லிடப்பேசி செயல்படவில்லை என்று பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை அவர்கள் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, மத குருமார்களில் ஒருவரான நஸீம் அலி நிஸாமி கூறியதாவது: சிந்து மாகாணத்துக்குச் செல்ல எங்களுக்கு நுழைவு இசைவு அனுமதி இல்லை. எனவே, நாங்கள் எப்படி அந்த மாகாணத்துக்குச் சென்றிருக்க முடியும்.
அமைதியையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் சூஃபி போதனையில் வளர்ந்தவர்கள் நாங்கள். உலகில் நல்லவர்களும், தீயவர்களும் கலந்தே உள்ளனர். இறைவனின் போதனைகளை மீறி நடப்பவர்களுக்கு தண்டனை உண்டு என்றனர்.
உங்களிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் எதற்காக விசாரணை நடத்தினர் என்ற கேள்விக்கு, "எங்கள் நுழைவு இசைவு உள்ளிட்ட ஆவணங்கள் குறித்துக் கேட்டனர்' என்று பதிலளித்தனர்.
நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப உதவிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்றும் அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக உள்ளூர் உருது பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், "சூஃபி மத குருமார்களுக்கு இந்திய உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவின் தலைமை மத குருவான சையது ஆசிஃப் நிஸாமி, அவரது உறவினரான நஸீம் அலி நிஸாமியும் பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள டாட்டா தர்பார் வழிபாட்டுத் தலத்துக்குச் சென்றனர்.
கடந்த 8-ஆம் தேதி கராச்சி சென்ற அவர்கள், அங்குள்ள தங்களது உறவினர்களைச் சந்தித்துவிட்டு லாகூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் கராச்சி செல்ல லாகூர் விமான நிலையத்துக்குச் சென்ற பிறகு அவர்கள் இருவரும் மாயமாகி விட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com