பாபர் மசூதி இடிப்பு வழக்கு: லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு மீதான விசாரணை, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு மீதான விசாரணை, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மே 22) மீண்டும் தொடங்கவுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 19-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
அதாவது, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு மாதத்துக்குள் தொடங்கி நாள்தோறும் நடத்த வேண்டும் என்றும், இந்த விசாரணையை விரைவில் முடித்து, 2 ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கு மீது திங்கள்கிழமை முதல் மீண்டும் விசாரணை தொடங்கவுள்ளது.
முன்னதாக, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள் 5 பேர், லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நேரில் ஆஜராகினர். அவர்களில் ராம் விலாஸ் வேதாந்தியும் ஒருவராவார். இதையடுத்து, அவர்கள் சமர்ப்பித்த ஜாமீன் மனுக்களை ஏற்று, 5 பேரையும் ஜாமீனில் நீதிமன்றம் விடுவித்தது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி, கரசேவகர்களால் கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் மீது முதலில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, பிறகு ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் விசாரித்தபோது, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com