இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கும்: மூடிஸ் கணிப்பு

இந்தியாவில் 2017-18-ஆம் நிதியாண்டில் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.
இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கும்: மூடிஸ் கணிப்பு

இந்தியாவில் 2017-18-ஆம் நிதியாண்டில் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. ஆனால், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நிலை மேம்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
 தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மூடிஸ் நிறுவனத்தின் முதலீட்டுச் சேவைப் பிரிவின் துணைத் தலைவர் வில்லியம் ஃபாஸ்டர் கூறியதாவது:
 இந்தியாவில் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வருவது அரசின் கடன் சுமையைக் குறைக்க பெருமளவில் உதவும். எனினும், இப்போது மேற்கொண்டுள்ள வரிக் குறைப்பு நடவடிக்கையாலும், அரசு தனது பொதுச் செலவுகளை அதிகரித்துள்ளதாலும் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கும்.
 இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டுதான் அதன் கடன் தர மதிப்பீட்டை எங்கள் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
 இந்தியாவின் கடனுக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள வேறுபாடு 68.6 சதவீதமாக உள்ளது. இதனை வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் 60 சதவீதமாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளனர். எனினும், இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த இரு ஆண்டுகளைப்போல அரசின் வருவாய் குறைவு, பொதுச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றை பட்ஜெட் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 இந்தியாவில் சாதகமான அம்சங்களும், பாதகமான அம்சங்களும் சமஅளவில் உள்ளன. எனவே, அதன் கடன் தர மதிப்பீட்டில் இப்போதைக்கு மீண்டும் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அரசு தொடர்ந்து தனது வருவாயை அதிகரித்து, செலவுகளைக் குறைப்பதன் மூலம்தான் எதிர்காலத்தின் அதன் கடன்தர மதிப்பீட்டை உயர்த்திக் கொள்ள முடியும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com