ஒரே ஒரு போலி நிறுவனம் பெயரில் 2,134 வங்கிக் கணக்குகள்: தலையை விட்டுவிட்டு வாலைப் பிடித்ததோ!

போலி நிறுவனங்களின் வங்குக் கணக்குகளை ஆராய்ந்ததில், ஒரே ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் மட்டும் 2,134 வங்கிக் கணக்குகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
ஒரே ஒரு போலி நிறுவனம் பெயரில் 2,134 வங்கிக் கணக்குகள்: தலையை விட்டுவிட்டு வாலைப் பிடித்ததோ!

போலி நிறுவனங்களின் வங்குக் கணக்குகளை ஆராய்ந்ததில், ஒரே ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் மட்டும் 2,134 வங்கிக் கணக்குகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, 5,800 போலி (ஷேல்) நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு, கருப்புப் பண மோசடி, கள்ள நோட்டுப் புழக்கம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாபஸ் பெற்றது. அதையடுத்து, வரி ஏய்ப்புக்காக, பெயரளவில் இயங்கி வரும் போலி நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை மத்திய அரசு சேகரித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு, 13 வங்கிகளிடம் இருந்து சந்தேகத்துக்குரிய 2,09,032 நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில், 2 லட்சம் போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் கடந்த மாதம் முடக்கப்பட்டன.

அதையடுத்து, 5,800 போலி நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சில நிறுவனங்கள் தங்களது பெயரில் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரேயொரு நிறுவனம் மட்டும் 2,134 வங்கிக் கணக்குகளை வைத்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, ஒரு நிறுவனம் 900 வங்கிக் கணக்குகளையும், மற்றொரு நிறுவனம் 300 வங்கிக் கணக்குகளையும் வைத்துள்ளன.

ரூபாய் நோட்டு வாபஸுக்கு முன்பும், அதற்குப் பிறகும் இந்த வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணப் பரிவர்த்தனைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று, கடன் கணக்குகளைத் தவிர, இந்த வங்கிக் கணக்குகளில் ரூ.22.05 கோடி இருந்தது. அதற்கு அடுத்த நாளில் இருந்து, வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் நாள் வரை, இந்த வங்கிக் கணக்குகளில் ஒட்டுமொத்தமாக ரூ.4,573.87 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.4,552 கோடி எடுக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட காலக்கட்டத்தில், கோடிக்கணக்கில் புரண்ட வங்கிக் கணக்குகளின் இருப்பு மீண்டும் சொற்பத் தொகையாகக் குறைந்து விட்டது.

429 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில், கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இருப்புத் தொகை பூஜ்யமாக இருந்தது. பிறகு அந்த கணக்குகளில் ரூ.11 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த கணக்குகள் முடக்கப்படும் நாளன்று, ரூ.42,000 மட்டுமே இருந்தது என்று ஒரு வங்கி தெரிவித்துள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, சில நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.13 கோடி மட்டுமே இருந்தது. அதன் பிறகு, சுமார் 3,800 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டு, பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்போது, அவற்றில் ரூ.200 கோடி இருந்தது. சுமார் 2.5 சதவீத நிறுவனங்களை மட்டுமே அரசு முடக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் குறித்த காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று விசாரணை அமைப்புகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com