வீட்டுப் பணியாளர்களுக்கும் தொழிலாளர் அந்தஸ்து வழங்கும் புதிய வரைவுக் கொள்கை: மத்திய அரசு தயாரிப்பு

வீட்டுப் பணியாளர்களுக்கும் பிற தொழிலாளர்களைப் போலவே சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அளிப்பதற்கான தேசிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.
வீட்டுப் பணியாளர்களுக்கும் தொழிலாளர் அந்தஸ்து வழங்கும் புதிய வரைவுக் கொள்கை: மத்திய அரசு தயாரிப்பு

வீட்டுப் பணியாளர்களுக்கும் பிற தொழிலாளர்களைப் போலவே சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அளிப்பதற்கான தேசிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், வீட்டு வேலைகளைச் செய்யும் பணியாளர்களுக்கும் அளிப்பதற்கான தேசிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.
அந்த வரைவில், வீட்டுப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, நியாயமான பணி நிபந்தனைகள் ஆகியவற்றை வழங்குதல், அவர்களது குறைகளைக் கேட்டு, தகராறுகளைத் தீர்த்து வைத்தல் போன்றவற்றை செயல்படுத்துவதற்கான நிரந்தர அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு வேலைகளைச் செய்பவர்களுக்கும் தொழிலாளர் அந்தஸ்தை வழங்கும் வகையில், அரசின் தொழிலாளர் நலத் துறை போன்ற அமைப்புகளில் அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான உரிமையை அளிக்கவும் அந்த வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது.
அதுமட்டுமன்றி, தொழிலாளர் நலம் தொடர்பான அனைத்துச் சட்டங்களிலும் வலியுறுத்தப்படும் குறைந்தபட்ச ஊதியம், சரிநிகர் சம்பளம் போன்ற உரிமைகள் வீட்டுப் பணியாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அந்தச் சட்டங்களின் நோக்கங்கள் விரிவுபடுத்த வேண்டும்.
வீட்டுப் பணியாளர்கள் தங்களுக்கென்று சங்கங்களை அமைத்துக் கொள்வதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
வீட்டுப் பணியாளர் மற்றும் பணிக்கு அமர்த்துபவர் இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது.
அந்த வரைவுக் கொள்கையில், வீட்டுப் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு, ஓய்வு நேரம் ஆகியவற்றை வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தித் தரும் ஒப்பந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் அந்த வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது.
இந்த தேசியக் கொள்கையை அமல்படுத்துவதற்காக, மத்திய, மாநில, மாவட்ட அளவில் முத்தரப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அந்த வரைவுக் கொள்கை வலியுறுத்துகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களும், பொதுமக்களும் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அடுத்த மாதம் 16-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரைவுக் கொள்கையில் வீட்டுப் பணியாளர்களுக்கான அடிப்படை ஊதியம் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், இதற்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட வீட்டுப் பணியாளர்கள் தேசியக் கொள்கையில் அவர்களது குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9,000-ஆக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com